×

திரிணாமுல், ஆம்ஆத்மி, உத்தவ் சிவசேனா கட்சிகள் உடைக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அமைச்சர் பதவிகேட்டு அதிருப்தி எம்பிக்கள் போர்க்கொடி

 

விரைவில் அமைச்சரவை மாற்றம் நடப்பதால் மோடி தீவிர ஆலோசனை

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒன்றிய பாஜக அமைச்சரவையில் பஞ்சாப் மாநிலத்திற்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகிறது. 2020ம் ஆண்டு விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகாலி தளம் கூட்டணியில் இருந்து வெளியேறியபோது ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த சோம் பிரகாஷுக்குப் பின் ரவ்னீத் சிங் பிட்டு தற்போது அப்பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தனித்தனியாகச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் வரவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறார். இந்த விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கொந்தளிப்பால் அவரை பதவியில் இருந்து நீக்கவோ அல்லது துறை மாற்றம் செய்யவோ ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், பஞ்சாப் மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அவருக்குப் பதிலாக ஆம்ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்த ராகவ் சத்தா அல்லது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சீக்கியர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்குப் பதிலாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் நிதின் கட்கரி, மனோகர் லால் கட்டார் போன்ற மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் முன்பு அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர் ஆகியோர் மீண்டும் முக்கிய பொறுப்புகளுடன் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ்) பிரிவைச் சேர்ந்த 6 எம்.பி.க்களை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வந்த ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவர் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஆவார்.

அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த 20 அதிருப்தி எம்.பி.க்கள் அமைச்சரவையில் இடம் கோரி பிடிவாதம் காட்டி வருகின்றனர். பாஜகவுக்கு அடுத்தபடியாக பெரிய கூட்டணியாக உருவெடுத்துள்ள இவர்களை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து பாஜக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எனவே விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

33 எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆதரவு
கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்கு பின்னர் கடந்த சில வாரங்களில் மட்டும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (யுபிடி) ஆகிய எதிர்க்கட்சிகளில் இருந்து மொத்தம் 26 மக்களவை எம்பிக்கள் விலகி, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் காகோலி கோஷ் தஸ்திதார் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் தலைமையில் 20 எம்.பி.க்கள் அதிருப்தி குழுவாக பிரிந்து, தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைந்து பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

அதேபோல் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவிலிருந்து 6 எம்.பி.க்கள் விலகி, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவில் இணைந்து ஒன்றிய அரசுக்கு வலுசேர்த்துள்ளனர். மறுபுறம், நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா தலைமையில் சுவாதி மாலிவால் உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் அக்கட்சியிலிருந்து அதிரடியாக வெளியேறி நேரடியாக பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதனால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 33 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பணியாற்ற உறுதி பூண்டுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Tags : Union Minister ,Trinamool ,Amaatmi ,Uddhav Sivasena ,Modi ,New Delhi ,PM ,Union Cabinet ,Punjab ,Union BJP Cabinet ,
× RELATED நட்புக்கும், உறவுக்கும் பதவிகளை...