×

ரூ.200 கோடி பணமோசடி வழக்கு; சட்ட போராட்டத்தில் ஜாக்குலினுக்கு பின்னடைவு: சுப்ரீம் கோர்ட்டில் மனுவை வாபஸ் பெற்றார்

புதுடெல்லி: ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் திரும்பப் பெற்றார். கடந்த 2021ம் ஆண்டில் தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பணமோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சுகேஷிடம் இருந்து சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் பைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களைப் பெற்றதாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இதுதொடர்பான விசாரணையில், கடந்த 2024ம் ஆண்டு மே 30ம் தேதியன்று டெல்லி நீதிமன்றம் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சுகேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. இதனை எதிர்த்து ஜாக்குலின் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்குலின் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ‘இந்த சிறப்பு விடுப்பு மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோருகிறோம்’ என்று தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியதோடு, சட்டப்படி உரிய மற்ற தீர்வுகளைத் தேடிக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனர். ஜாக்குலின் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத்துறை ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது அவர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். அதனால் ஜாக்குலினின் சட்டப் போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Jacqueline ,Supreme Court ,New Delhi ,Jacqueline Fernandez ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...