×

நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு 8208 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று அனுப்பப்படுகிறது

நெல்லை, மார்ச் 10: நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்காக 5 தொகுதிகளுக்கு 8208 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் இன்று தொகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகம், புதுவையில் சட்டசபை தேர்தல் ஏப்.6ம் தேதி நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி துவங்குகிறது. தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகின்றன. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ெநல்லை, பாளை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளில் வாக்குப்பதிவிற்காக 3,229 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,416 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,563 விவிபேட் இயந்திரங்கள் என 8,208 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் வாக்குப்பதிவிற்காக 1924 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி சுழற்சி முறையில் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி, கலெக்டர் விஷ்ணு தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நெல்லை சிவகிருஷ்ணமூர்த்தி, அம்பை பிரதீக் தயாள், பாளை கண்ணன், நாங்குநேரி குழந்தைவேலு, ராதாபுரம் உஷா, உதவி கலெக்டர் (பயிற்சி) அலர்மேல்மங்கை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ்குமார் (பொது), சாந்தி (தேர்தல்), துணை கலெக்டர் (பயிற்சி) மகாலெட்சுமி, தேர்தல் தாசில்தார் கந்தப்பன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாளை. செல்வன், நெல்லை பகவதிபெருமாள், ராதாபுரம் கனகராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் அனைத்தும் கணினி சுழற்சி முறையில் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஒதுக்கீடு அடிப்படையில் நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை ஆகிய 5 தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லை ராமையன்பட்டி குடோனில் இருந்து கலெக்டர் விஷ்ணு தலைமையில் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றன. அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாளை, நெல்லை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் கொண்டு செல்லப்பட்டு தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மேற்கொண்ட செலவினங்களை கணக்கிடுவதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர், செலவினங்கள் முறையாக பராமரிப்பது குறித்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர். 120% ஒதுக்கீடு
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 120 சதவீதமும், விவிபேட் இயந்திரங்கள் 133 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

Tags : Nellai district ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...