×

தமிழகத்தில் எங்கும் எப்போதும் மின்தடை: பேரவையில் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

 

சென்னை: தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் மின்தடை ஏற்படுகிறது என ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின்போது, வேதாரண்யம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது: ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு இருக்கவேண்டும். தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை. அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாடுகளுக்கும் தீவனம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் இந்தச் சூழலில் அதற்கான அனைத்து நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அதை நீங்களும் செய்ய வேண்டும். விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய உங்கள் அரசு இரண்டு முறை அறிவிப்பு செய்தீர்கள். ஆனால், இரண்டு அறிவிப்பிலும் விவசாயிகளின் முழுக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கவில்லை. உங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னது வேறு. இது காலம் தாழ்த்திச் செய்யக்கூடிய திட்டம் அல்ல. கந்துவட்டியில் பாதிக்காமல் பாதுகாத்தது கூட்டுறவுக் கடன்.

ஆனால், மீண்டும் விவசாயிகள் கந்துவட்டிக் கடனுக்குச் சென்றுவிடக்கூடாது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடியவர்களுக்கு உதவியாக இருக்கும். இப்பொழுது எங்கே பார்த்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் மின்தடை, மின்தடை என்று இருக்கிறது. அதை நீங்கள் தீர்த்துத் தர வேண்டும். 125 நாள் வேலை ஒன்றி அரசு அறிவித்திருக்கிறது. இந்த 125 நாள் வேலையை நிரந்தரமாக எல்லா இடங்களிலும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,O.S. Manian ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,AIADMK MLA ,Vedaranyam ,Mettur ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து