×

மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதல்வரிடம் காங்கிரஸ் அமைச்சர்கள் பேச வேண்டும்: சட்டசபையில் பாஜ எம்எல்ஏ வலியுறுத்தல்

 

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது. இச்சட்டமன்ற கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம், கவர்னர் உரை போன்றவை முக்கியமானது. பேரவையில் எப்போதும் எல்லா உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். கவர்னர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை வரவேற்கிறேன். அதே நேரம், தாய்மொழியாம் தமிழ்மொழியை நாம் செந்தமிழ் என சொல்கிறோம். ஆனால், கவர்னர் உரையாற்றிய 37 நிமிடங்களில், தலைவர்களின் பெயர்களை அவர் உச்சரித்தது தவறாகவே இருந்தது. சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர்: நம் மாநில கவர்னர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர். அவர் என்னிடம் வணக்கம் சொல்வதற்கு கற்றுக்கொடுங்கள் எனக் கேட்டார். வேறு மாநிலத்தவருக்கு தமிழ் உச்சரிப்பு சிரமமாகத்தான் இருக்கும். எனவே, இதுபற்றி மேற்கொண்டு விமர்சிக்க வேண்டாம். பிரேமலதா விஜயகாந்த்: முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஓரு கோரிக்கை முன்வைக்க விரும்புகிறேன்.

அவை நடந்து கொண்டிருக்கும்போது, அவை பணியாளர்கள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது கஷ்டமாக நினைக்கிறேன். இதற்குப் பதில், ஒவ்வொரு உறுப்பினரின் மேஜை அருகே தண்ணீர் பாட்டில் வைக்கலாம். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு அனுமதி இல்லையெனில், சில்வர் பாட்டில் வைக்கலாம், சபை பணியாளர்களின் சுமையை குறைக்கலாம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (திமுக): நல்ல கருத்துதான். இது ஏற்கத்தக்கதுதான். ஆனால், இங்கு உறுப்பினர்களுக்கு கோபம் வந்தால், தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசி அடிப்பார்களே? தங்கம் தென்னரசு (திமுக): அண்ணன் தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக சொல்கிறார் என நினைக்கிறேன். பிரேமலதா விஜயகாந்த்: கோபம் வரும்போது தண்ணீர் பாட்டிலை வீசவேண்டும் என்பதில்லை. இங்கு தூக்கி வீசுவதற்கு ஏராளமான பொருட்கள் உள்ளன. இப்பேரவையில் அப்படி நடக்கக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். காவிரி பிரச்னை, மேகதாது பிரச்னைகளில் தமிழக உரிமையை முதல்வர் விட்டுக் கொடுக்க மாட்டார் என எண்ணுகிறேன். ஏனெனில், கர்நாடக முதல்வரும் தமிழக முதல்வரும் முதன்முறையாக முதல்வராக வந்துள்ளார். இருவரும் இப்பிரச்னை குறித்து பேசலாம். இப்பிரச்னைக்கு இருவரும் நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.

பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு தமிழகத்தில் முதன்முறையாக நடந்துள்ளது. வாயு கசிவால் இத்தனை பேர் இறந்திருப்பது இதுவே முதல்முறை. இனிமேல் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விபத்தில் இறந்து போனவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். விருத்தாசலத்தில் ஒரு பீங்கான் தொழிற்சாலையும், அதுதொடர்புடைய கல்லூரியும் நலிவுற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. இவையிரண்டையும் மேம்படுத்தி, இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். மேலும், விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு முழு பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
உதகமண்டலம் தொகுதி பாஜ எம்எல்ஏ போஜராஜன்: சட்டமன்றத் தேர்தலின்போது தவெக முக்கிய வாக்குறுதிகளை கொடுத்துள்ளீர்கள். நிதி ஆதாரத்தை பெருக்கி, இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்து, தேவையான நிதியை பெறவேண்டும். வருவாய்துறை அமைச்சர் டெல்லி சென்று ஆயிரம் கோடி ரூபாய் நிதி பெற்று வந்துள்ளார். தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு துணையாக இருக்கும். மேகதாது அணை விவகாரம் குறித்து சிலர் பேசினர். மேகதாது அணை கட்டும் விவகாரத்தை தடுத்து நிறுத்தும் வகையில் கர்நாடக முதல்வரிடம் தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் பேசி, இப்பிரச்னையை விரைவில் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, தமிழக உரிமையை காப்பாற்ற வேண்டும். தமிழக சுற்றுலாத் தலங்களில் ஊட்டி முக்கியமாக விளங்கி வருகிறது.

இதன் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகர் இனத்தை பழங்குடியினர் சமுதாயத்தில் இணைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. இதற்கான பரிந்துரைகள் திமுக ஆட்சியில் வைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய தவெக அரசு, இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் வன்னியரசு: தமிழகத்துக்கு வழங்கப்படாமல் இருக்கும் கல்வி திட்டங்களுக்கான நிதியை ஒன்றிய அரசிடம் நீங்கள் பேசி வாங்கி தரவேண்டும். உதகமண்டலத்தில் படுகர் இனத்தை பழங்குடியினர் சமுதாயத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கட்டாயம் பரிசீலிக்கப்படும். இவ்வாறு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் விவாதம் நடந்தது.

 

Tags : Congress ,Karnataka ,Meghadad ,BajaMLA ,Chennai ,Premalatha Vijayakanth ,MLA ,Governor ,Tamil Legislative Assembly ,Megadad Dam ,
× RELATED தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று...