ஆர்டிஓ பங்கேற்பு தஞ்சை மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்க 1450 பேர் விருப்பம்

தஞ்சை, மார்ச் 9: தபால் வாக்கு அளிப்பதற்கு 1450 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். தஞ்சை கீழவாசல் பகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு செயல்மறை விளக்க பயிற்சியும், 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்கு செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்துவது தொடர்பாக அவர்களின் விருப்பங்களை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தஞ்சை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அடையாள அட்டை வைத்துள்ள தபால் வாக்கு அளிப்பதற்கான விருப்பமுள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வாக்களிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்களிக்க விருப்பமுள்ள 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் படிவம் 20 பெற்றுக்கொண்டு தபால் வாக்கு மூலமாக வாக்களிக்கலாம். விருப்பம் இல்லை என்றால் வாக்காளர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் தனது வாக்குகளை செலுத்தலாம். இது கட்டாயம் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே தஞ்சை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 45337 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 13946 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் தபால் வாக்கு அளிக்க விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 12டி படிவம் வழங்கப்படுகிறது. இதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.

அதன்பின்னர் தான் இவர் தபால் வாக்கு அளிப்பதற்கு தகுதியுடையவர் என்பது உறுதியாகும். மேலும் தபால் வாக்கு அளிக்கும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இது சம்பந்தமான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 1450 பேர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் தபால் வாக்கு அளிக்க தேவைப்படும் நபர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. தபால் ஓட்டு அளிக்க விருப்பம் உள்ளவர்கள், அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் செய்து தரப்படும் என்றார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.வேலுமணி, தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சை தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>