×

வரவு, செலவு கணக்கு விவகாரம் மலையாள நடிகர்கள் சங்கத்தில் மோதல் வெடித்தது: தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா

திருவனந்தபுரம்: கொச்சியில் நேற்று நடைபெற்ற மலையாள நடிகர்கள் சங்க தலைவர் ஸ்வேதா மேனன், பொதுச்செயலாளர் உள்பட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் கடந்த வருடம் ஆகஸ்டில் நடைபெற்றது. இதில் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன், பொதுச் செயலாளராக நடிகை குக்கு பரமேஸ்வரன் உள்பட 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு ஒரு பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை நடிகர் டினி டோம் மதவாதி என்று கூறியதாக துணைத் தலைவர் நடிகை அன்சிபா ஹசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் கொச்சி போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் நேற்று நடிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கொச்சியில் நடைபெற்றது. முன்னாள் தலைவரான நடிகர் மோகன்லால் பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.இதன் பிறகு பொதுச்செயலாளர் குக்கு பரமேஸ்வரன் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார். ஆனால் அந்தக் கணக்கை அங்கீகரிக்க முடியாது என்று கூறி நடிகர்கள் சித்திக், பாபுராஜ், இடைவேளை பாபு ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து நடிகர், நடிகர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மோகன்லால் குறுக்கிட்டு அனைவரையும் சமரசம் செய்ய முயற்சித்தார். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. இதற்கிடையே தற்போது பதவியில் உள்ள தலைவர் ஸ்வேதா மேனன், பொதுச்செயலாளர் உள்பட 17 நிர்வாகிகளும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். தொடர்ந்து நடிகர்கள் சங்கத்தை நிர்வகிக்க ஒரு தற்காலிக கமிட்டி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

Tags : Malayalam Actors' Association ,president ,Swetha Menon ,Thiruvananthapuram ,general secretary ,Kochi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...