- என்.எல்.சி.
- மத்திய அமைச்சர்
- கிஷன் ரெட்டி
- சென்னை
- நிலக்கரி மற்றும் சுரங்க மத்திய அமைச்சர்
- பாஜா
- இந்தியா
சென்னை: ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் கொள்கை முற்றிலும் மாறியுள்ளது. நாட்டின் எல்லையோரப் பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு வன்முறைகளுக்கு எதிராக மத்திய அரசு ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையைக் கடைபிடித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அங்கு அமைதி திரும்பி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய பிரிவினைவாத குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட்டு, ஜனநாயக பாதையில் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு முகம் கொடுத்துள்ளது. 2014ம் ஆண்டிற்கு முன்பு நலிவடைந்த பொருளாதாரமாகப் பார்க்கப்பட்ட இந்தியா, இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
மோடி தலைமையிலான 12 ஆண்டு கால பாஜ ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. மத்திய நிலக்கரித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த ஆண்டுகளில் 1 பில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியா உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தற்போது நிலக்கரியிலிருந்து சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் எத்தனால், மெத்தனால், எரிவாயு போன்ற துணைப் பொருட்களை தயாரிக்கும் ‘நிலக்கரி வாயுவாக்கம்’ திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.46,000 கோடி ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த இரு மாதங்களுக்குள் வெளியிடப்படும்.
விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு தேவையான லித்தியம், கோபால்ட் போன்ற முக்கிய தாதுக்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்டறிந்து அகழ்வாராய்ச்சி செய்ய ரூ.34,000 கோடி மதிப்பிலான ‘தேசிய முக்கிய தாதுக்கள் இயக்கம்’ தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனம், பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில், நிலக்கரி மற்றும் லிக்னைட் எரிப்புக்குப் பின் கிடைக்கும் சாம்பலிலிருந்து ‘அரிய புவி தனிமங்கள்’ கண்டறியப்பட்டுள்ளன.
இவை புற்றுநோய் மருந்து தயாரிப்பிற்குப் பயன்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஓராண்டிற்குள் இதற்கான முன்னோடித் திட்டம் இறுதி செய்யப்பட்டு, வணிக ரீதியிலான உற்பத்தி தமிழ்நாட்டில் தொடங்கும். இத்தகைய சுரங்கப் பணிகள் மூலம் கிடைக்கும் பிரீமியம், ராயல்டி மற்றும் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி உள்ளிட்ட அனைத்து வருவாயும் 100 விழுக்காடு முழுமையாக தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்கப்படும். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி மேம்படும் என்பதால், என்எல்சி நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக மக்களும், புதிய அரசும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
