×

வேலூர் மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் தவறாது வாக்களிக்க வேண்டும் டி.கே.எம் கல்லூரி நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு

வேலூர், மார்ச் 9: வேலூர் மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் கோவிட் தடுப்பூசி மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வேலூர் டவுன் ஹால் அருகே நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி தெற்கு போலீஸ் நிலையம் அருகே நிறைவு பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவிகளிடம், வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட ஒங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை திட்ட அலுவலர் கோமதி, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.கே.எம் கல்லூரி தாளாளர் மணிநாதன் வரவேற்றார்.
முன்னதாக கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:

நடக்க உள்ள சட்டமன்ற பொதுதேர்தலில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நூறு சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற உறுதி கொள்ள வேண்டும். 30 முதல் 80 வயது உடையவர்கள் ஆர்வமாக வாக்களிக்கிறார்கள். 18 வயது முதல் 19 வயதுடைய முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர்கள் தவறாது வாக்களிக்க வேண்டும். மேலும் தங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் தங்களது கிராமத்தில் உள்ளவர்களையும் வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துக் கூறி வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் நடனம் மற்றும் நாடகம் மூலம் வழிப்புணர்வை ஏற்படுத்தினர். குடுகுடுப்பைக்காரரர் குறி சொல்வதைப் போல ஏப்ரல் 6ம் தேதி வாக்குரிமையுள்ள அனைத்து மாணவர்களும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல் ஊரிசு கல்லூரியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து கட்டை விரலில் மை தடவி கைரேகை மூலம் கையெழுத்திட்டார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊரீசு கல்லூரி முதல்வர் நெல்சன் விமல்நாதன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, கண்காணிப்பாளர் சில்வியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vellore District ,DKM College ,
× RELATED அமெரிக்க கணவர் பெயரில் போலி சான்று...