×

இந்த வார விசேஷங்கள்

20.6.2026 – சனி சஷ்டி விரதம்

இன்று மகம் நட்சத்திரம், பூரம் நட்சத்திரம் கலந்த நாள். சஷ்டி 6-வது திதி. ஆறுமுகனுக்கும் மகாலட்சுமிக்கும் உரிய நாள். இன்றைய தினம், முருகனை நினைத்து சஷ்டிவிரதம் இருக்க வேண்டியது முக்கியம். சஷ்டிவிரதம், வாழ்வை வளமாக்கும். சஷ்டி விரதத்தை அனைவரும் மேற்கொள்ளலாம். சஷ்டி விரதத்தைக் கடைபிடிப்பதால், மனம் உறுதியாகும். எந்த கஷ்டங்களும் அணுகாது. எதையும் கூர்மையாக எதிர் கொள்ளும் ஆற்றல் பிறக்கும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். இன்று உபவாசமிருந்து, கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், கந்தர் அனுபூதி போன்ற முருகப் பெருமானின் துதிப்பாடலைப் பாடி வழிபாடு நடத்துவது நன்று.

20.6.2026 – சனி ஆரண்ய கௌரி விரதம்

ஆரண்ய கௌரி விரதம் அல்லது ஆரண்ய சஷ்டி என்பது அற்புதமான விரதம். ஆரண்யதேவியானவள் அன்னை கௌரியாக, ஸ்கந்தமாதா எனும் துர்கையின் வடிவமாக, வியாக்ர வாகினியாக, வனங்களில் உறைந்திருக்கும் மலைமகளாக போற்றப் படுகிறாள். இந்த தேவியை வணங்குவதால், இயற்கை வளங்களும் பயிர்களும் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அன்று அதிகாலையில் நீராடி, அம்பிகை மற்றும் முருகப் பெருமானை வழிபட வேண்டும்.

பலவகை மரங்கள் மற்றும் இயற்கையை கௌரி தேவியாக நினைத்து வழிபடுவது இந்த விரதத்தின் தனித்துவமாகும். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும், மழலை பாக்கியமும் கிடைக்கும். களத்திர தோஷம் நீங்கி விரைவான திருமணத்திற்கு வழிவகுக்கும். வளர்பிறை சஷ்டிதிதியில், இயற்கையான வனச் சூழலையே அம்பிகையாக பாவித்து மேற்கொள்ளப்படும் ஒரு சிறப்பான விரதமாகும். இந்த நாளில் அம்பிகையையும் முருகப் பெருமானையும் வழிபடுவது திருமணத் தடைகளை நீக்கி, மழலைச் செல்வத்தைத் தரும்.

20.6.2026 – சனி மாணிக்கவாசகர் குருபூஜை

அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்று பல திருநாமங்களால் போற்றப்படும் மாணிக்கவாசகர், சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். மாணிக்கவாசகர் பாடிய புனித நூல்கள் திருவாசகமும் திருக் கோவையாருமாகும். வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார்.

பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள் தமிழில் இலக்கிய வளமைக்கு சான்றுகளாகும். சிவபெருமானை பல பலப் பாடல்களால் துதிக்க, இவர் கூறும் பாடல்களை சிவபெருமானே ஒரு வேதியர் வேடத்தில் வந்து எழுதிக் கொண்டாராம். நிறைவாக திருச்சிற்றம் பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்ட, மாணிக்கவாசகரும் பாடி முடித்தார்.

பாடி முடித்ததும், ஓலைச் சுவடியின் முடிவில் `மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்’ என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோயிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. இவருடைய பெருமையை உணர்ந்த தில்லை வாழ் அந்தணர்கள், மணிவாசகரின் பாடல்களைப் போற்றுகின்றனர். ஒரு நாள், திருவாசகத்தின் சாரமான பொருள் எது? என்று மணிவாசகரிடம் கேட்க, மணிவாசகர் சற்றும் தயங்காது, “இதோ அம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றானே அவன்தான்” என்று சொல்லி, பஞ்சாட்சரபடிகளைத் தாண்டி, உள்ளே நுழைந்து, சிவபெருமானோடு ஜோதியில் கலந்தார் என்பது வரலாறு. தில்லை பாதி; திருவாசகம் பாதி அல்லவா! திருஅருட்பிரகாச வள்ளலார், இவருடைய திருவாசகத்தின் பெருமையை, தன்னுடைய சுய அனுபவமாகப் பாடுகின்றார்.

“வான்கலந்த மாணிக்கவாசக!
நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”

“நரியைக் குதிரைசெய்’’ எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது. ஞான வாழ்வு வாழ்ந்த இவர், 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் முக்தியடைந்தார். அவர் குரு பூஜை இன்று.

21.6.2026 – ஞாயிறு அமர் நீதி நாயனார் குரு பூஜை

அமர்நீதி நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சிவனடியார்க்கு உணவு அளித்தல், ஆடை அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.“மழை வரும் போல இருக்கிறது. நீராடி விட்டு வருவதற்குள் மழை பிடித்துக் கொண்டால், கட்டுவதற்கு மாற்று கோவணம் அடியேனிடத்தில் இல்லை. இதோ இந்தத் தண்டத்தில் கட்டியுள்ள கோவணத்தை உம்மிடம் தருகின்றோம். நீர் இதைப் பாதுகாத்து, நீராடிவிட்டு வந்தவுடன் தரவேண்டும்’’

“அதற்கென்ன தாருங்கள். பாதுகாத்து உங்கள் விருப்பப்படி தருகின்றேன்’’ அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் வைத்தார். சிவனடியாருக்காகக் காத்திருந்தார். சற்று நேரத்தில் சிவனடியார் மழையில் நனைந்தவராய் வந்தார். அவர் வருவதற்குள் தயாராய் வைத்துக்கொள்வோம் என்று தேடிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவணம் வைத்த இடத்தில் இல்லை. சிவனடியாரின் அதே கோவணம் கேட்க, திகைத்தார். அவரைத் திரும்பத் திரும்ப விழுந்து வணங்கினார்.“இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன்’’ என்று கூறினார். சற்று நேரம் அவரை நடுங்க வைத்த சிவனடியார்,

“சரி, போனது போயிற்று. அதைப் போன்ற இன்னொரு கோவணம் இந்தத் தண்டில் சுற்றி வைத்திருக்கிறேன். இதற்கு இணையான ஒரு கோவணம் உம்மிடம் இருந்தால் தரலாம் “சிவனடியார் தராசில் தண்டில் கட்டியிருந்த நனைந்த கோவணத்தை வைத்தார். வைத்த தட்டு இறங்கியது. தம்மிடம் இருந்த விலை உயர்ந்த அழகான கோவணத்தை அடுத்த தட்டில் வைத்தார்.

தட்டு இறங்கவே இல்லை. சிவனடியார் சிரித்தார். “நான்தான் இதற்கு இணையான கோவண மில்லை என்று சொல்கிறேனே’’ என்று சொன்னவுடன்,“ஐயனே! சற்று பொறுக்க வேண்டும்’’ என்று சொல்லி, தம்மிடமிருந்த பலப்பல ஆடைகளையும் ஆபரணங்களையும், வைர வைடூரியங்களையும் வைத்தார். தம்முடைய எல்லா செல்வங்களையும் தராசுத் தட்டில் வைத்தார். ஆனால், ஒரு அங்குலம்கூட தட்டு இறங்காமல் அப்படியே நின்றது. இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை! இனி எதை வைத்து அந்த கோவணத்திற்கு இணை செய்வது? திகைத்துப்போன அமர்நீதி நாயனார்,

“ஐயனே! இனி என்னிடம் வைப்பதற்கு எதுவும் இல்லை’’ என்று சொல்லி தன்னுடைய மனைவியையும் மகனையும் அந்தத் தராசின் மீது ஏறி நிற்கச் சொல்லி, `சிவாய நமஹ’ என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே தானும் ஏறி நின்றார். நாயனார் ஏறியவுடன் தராசுத் தட்டு கீழே இறங்கி கோவணத்திற்குச் சமமாக நின்றது. “ஐயா திருப்திதானே?’’ என்று கேட்டார் அமர்நீதி நாயனார்.

“திருப்தி.. திருப்தி’’ என்று சொல்லிக் கொண்டே மறைந்து போனார் சிவனடியார். அடுத்த நொடி அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். தலை சிறந்த சிவனடியார்களில் ஒருவரான அமர்நீதியார் குரு பூஜைநாள் இன்று, ஆனி பூரம்.

24.6.2026 – புதன் பாபஹரதசமி / கங்கா தேவி அவதார நாள்

பாபஹரதசமி என்பது பத்து வகையான பாவங்களைப் போக்கும் மிகச் சிறப்பான புண்ணிய நாளாகும். நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பத்து வகையான பாவங்களை (மனத்தால் 3, வாக்கால் 4, உடலால் 3) இந்த நாளில் விரதம் இருந்து கங்கை நதியில் நீராடுவது அல்லது வழிபடுவதன் மூலம் போக்கிக் கொள்ளலாம். பகீரதனின் முயற்சியால் கங்காதேவி பூமிக்கு வந்தடைந்த நாளாகவும் இது போற்றப்படுகிறது. இந்நாளில், கங்கை நதியிலோ அல்லது அருகில் உள்ள புனித நதிகளிலோ நீராடுவது மிகவும் விசேஷம். பார்வதி, பரமேஸ்வரர் மற்றும் கங்காதேவியின் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வது நன்மை தரும். ஏழைகளுக்கு அன்னதானம் அல்லது வஸ்திரதானம் செய்வது பாபங்களைப் போக்கும்.

25.6.2026 – வியாழன் பெரியாழ்வார் திருநட்சத்திரம்

பெரியாழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக அவதரித்தவர். எப்பொழுதும் பகவானையே நினைப்பதால், `விஷ்ணு சித்தர்’ என்பது பெயர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு பாமாலையும், பூமாலையும் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளைத் திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம், அரங்கனுக்கே மாமனார் ஆனார். அவர் இரண்டு பிரபந்தங்களை இயற்றினார்.

1. திருப்பல்லாண்டு.
2. பெரியாழ்வார் திருமொழி.

அவருடைய அவதார வைபவம் எல்லா பெருமாள் ஆலயங்களிலும் இன்று நடைபெறும்.

25.6.2026 – வியாழன் நிர்ஜல ஏகாதசி

பாண்டவர்களில் ஒருவரான பீமசேனன் பசியால் அவதிப்பட்டதால், அவரால் உணவு உண்ணாமல் இருக்க முடியவில்லை. எனவே, முனிவர் வியாசர் அவருக்கு இந்த ஒருநாள் விரதத்தை மட்டும் பரிந்துரைத்தார். இதனால் இது பீம ஏகாதசி அல்லது பாண்டவ நிர்ஜல ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. வருடத்தில் வரும் மற்ற 24 ஏகாதசி விரதங்களை முறையாகக் கடைப்பிடித்தால் கிடைக்கும் முழு பலன்களையும், இந்த ஒரேயொரு நிர்ஜல ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் பெற்றுவிடலாம்.

ஏகாதசி திதி தொடங்கும் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, விஷ்ணுவை வழிபட வேண்டும். நாள் முழுவதும் உணவு, தண்ணீர் அருந்தாமல் `ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை உச்சரித்து தியானிக்க வேண்டும். இந்த நாளில் ஏழைகளுக்குத் தானம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். மறுநாள் (துவாதசி திதி) காலையில் புனித நீர் அருந்தி, இறைவனை வழிபட்ட பிறகே இந்த விரதம் நிறைவு செய்யப்படும்.

Tags : Sani ,Sashti Vratam ,Maham ,Shashti ,Arumugam ,Mahalakshmi ,Murugan ,
× RELATED ஆனித் திருமஞ்சனமும் ஆடல்வல்லானின் அற்புத தரிசனமும்