ஆனித் திருமஞ்சனம் : 22-6-2026
1. ஆனியும் மார்கழியும்
இந்து தர்மத்தில் காலக் கணக்கீடு என்பது வெறும் நாட்காட்டி மட்டுமல்ல, அது பிரபஞ்ச விதிகளுடனும் இறை வழிபாட்டுடனும் நெருங்கிய தொடர்பு டையது. மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்: தை முதல் ஆனி வரை (உத்தராயணம்) தேவர்களின் பகல் பொழுது. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியான மாலை சந்தி (பிரதோஷ/சாயரட்சை) காலம் ஆகும். ஆடி முதல் மார்கழி வரை (தட்சிணாயனம் தேவர்களின் இரவுப் பொழுது. இதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் இரவு பொழுதின் இறுதிப் பகுதியான காலை சந்தி (உஷத் காலம்/பிரம்ம முகூர்த்தம்) காலம் ஆகும். சிவபெருமானுக்கு ஆனி மாதத்தில் ஒரு திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் ஒரு திருமஞ்சனமும், மிகச் சிறந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை ஆனி உத்தர திருமஞ்சனம், மார்கழி தரிசனம் என்பார்கள்.
2. அருவம், உருவம், அருவுருவம்
சிவன் உருவம். அருவம். அருவுருவம் எனும் மூன்று நிலைகளில் இருக்கிறான்.. கண்களுக்குத் தெரியாத, எந்தவொரு குறிப்பிட்ட வடிவமும், குணமும், எல்லையும் அற்ற தூய ஆன்மிக நிலை. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் ஆற்றல் வடிவம் அருவம். ஆகாயத் தலமான தில்லையில் (சிதம்பரம் நடராஜர் கோயிலில்) உள்ள “சிதம்பர ரகசியம்’’ இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அங்கே வெற்று வெளி (ஆகாயம்) மட்டுமே வழிபடப்படுகிறது. இரண்டாவதாக உருவமாகவும் இல்லாமல், முற்றிலும் வடிவமற்றும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் சிவலிங்கமாகக் காட்சியளிப்பது.
3. சிவலிங்கமும் நடராஜரும்
சிவலிங்கத்தின் அடிப்பகுதி (ஆவுடையார்) அருவ நிலையையும், மேல் பகுதி உருவ நிலையையும் உணர்த்தும். பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளியான `நாதமும் விந்துவும்’ இணைந்த வடிவம் இதுவே ஆகும். பெரும்பாலான சிவன் கோயில்களில் மூலவராக லிங்க வடிவமே இருக்கும். மனிதர்கள் கண்டு வழிபடுவதற்காகவும், தியானிப்பதற்காகவும் இறைவன் எடுத்தருளிய திருமேனிகள் உருவ நிலையில் வரும். உதாரணம்: நடராஜர், தட்சிணாமூர்த்தி, பிச்சாடனர், சோமாஸ்கந்தர். இறைவன் ஆன்மாக்களாகிய நமக்கு அருள்செய்வதற்காகவே தன் அருவ நிலையிலிருந்து, அருவுருவமாகி, பின்னர் உருவ நிலைக்குத் திருமேனி கொண்டு எழுந்தருளுகிறான்.அதில் பிரசித்தி பெற்ற வடிவம் நடராஜர் வடிவம்.
4. நடராஜர் வடிவம்.
சிவபெருமானின் மகேஸ்வர வடிவங்கள் எனப்படும் 64 திருவுருவங்களில், நடராஜர் (கூத்தன்) திருமேனி, கலை நயத்திலும், ஆன்மிகத் தத்துவத்திலும் மிக மிக முதன்மையானதாகக் கருதப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள்கூட வியந்து பாராட்டும் இந்த `ஆனந்தத் தாண்டவ’ நடராஜர் வடிவத்தின் பின்னால் இருக்கும் பிரபஞ்சத் தத்துவம் (Cosmic Symbolism) மிகவும் ஆழமானது. நடராஜரின் ஒவ்வொரு அங்கமும் ஒரு பெரும் தத்துவத்தை உணர்த்துகிறது:
1. வலக்கையில் உள்ள உடுக்கை (டமருகம்)ஒலியின் மூலம் உலகம் தோன்றுதல் எனும் படைத்தலைக் குறிக்கிறது.
2. தூக்கிய அபய அஸ்தம் (வலக்கை)உயிர்களுக்குத் தரும் பாதுகாப்பைக் குறிக்கிறது.
3. இடக்கையில் ஏந்திய நெருப்பு உலகை ஒடுக்கிக் கொள்ளுதல் அழித்தல்/ஒடுக்கலை அடையாளம் காட்டுகிறது.
4. ஊன்றிய காலின் கீழ் முயலகன்ஆணவம், மாயை, கன்மங்களை மிதித்தல் மறைத்தல் எனும் தொழிலைச் சுட்டுகிறது.
5. தூக்கிய இடது பாதம் (குஞ்சித பாதம்)சரணடைந்த உயிர்களுக்கு முக்தி அளித்தல் எனும் அருளலை விளக்குகிறது.
5. உச்சகட்ட ஞான வடிவம்
நடராஜரைச் சுற்றி இருக்கும் வட்ட வடிவ நெருப்பு வளையம் (திருவாசி): இந்த அகண்ட பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. பறக்கும் சடைமுடி, இறைவன் எல்லையற்ற ஆற்றலோடும், பேரானந்தத்தோடும் ஆடிக்கொண்டிருப்பதைக் குறிக்கிறது. சடையில் உள்ள கங்கை பேரறிவையும் (ஞானம்), பிறைச் சந்திரன் காலச் சக்கரத்தையும் குறிக்கின்றன. நவீன இயற்பியலாளர்கள் நடராஜரின் இந்த நடனத்தை அணுக்களின் நடனத்தோடு ஒப்பிடுகிறார்கள். பிரான்ஸ் நாட்டில் உள்ள CERN அறிவியல் மையத்தின் வாசலில் இந்த நடராஜர் சிலை இதனால்தான் நிறுவப்பட்டுள்ளது. 64 வடிவங்களில் நடராஜர் வடிவமே சைவ சமயத்தின் உச்சக்கட்ட ஞான வடிவமாகப் போற்றப்படுகிறது.
6. அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம்
“அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம்’’ என்ற விதியின்படி, இந்தப் பேரண்டத்தின் இயக்கத்தையும், நம் உடலுக்குள் நடக்கும் இயக்கத்தையும் நடராஜரின் நடனம் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கிறது. நடனம் என்றாலே அதில் ஒரு ஒழுங்கு தாள லயம் இருக்கும். நடராஜனின் நடனமும் பிரபஞ்ச இயக்கமும் ஒரு ஒழுங்கு முறையில் இருக்கும். பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன் மண்டலங்கள் (Galaxies), கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதில்லை.
அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சுழற்சி வேகத்தில் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.நடராஜரைச் சுற்றியுள்ள திருவாசி (நெருப்பு வளையம்) என்பது எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. அந்தப் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக நின்று இறைவன் ஆடும் நடனம், பிரபஞ்சத்தின் மாறாத இயக்க விதியைக் குறிக்கிறது. அவன் ஆட்டம் நின்றால் பிரபஞ்சத்தின் இயக்கமே நின்றுவிடும்.
7. நவீன இயற்பியலும் நடராஜ தத்துவமும்
நவீன இயற்பியல் பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்களான அணுக்களைப் பற்றி ஆராய்ந்தபோது வியந்துபோனது. அணுவிற்குள் இருக்கும் புரோட்டான், எலக்ட்ரான் போன்ற துகள்கள் இடைவிடாது அதிர்ந்து கொண்டும், சுழன்று கொண்டும் இருக்கின்றன. இதனை அறிவியல் உலகம் “துகள்களின் நடனம்’’ (Dance of Subatomic Particles) என்கிறது.இதனை முதன் முதலில் உலகிற்கு உரக்கச் சொன்னவர் புகழ்பெற்ற இயற்பியலாளர் பிரிட் ஜோஃப் காப்ரா (Fritjof Capra) ஆவார். அவர் தனது “தி தாவோ ஆஃப் பிசிக்ஸ்’’ (The Tao of Physics) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: நவீன இயற்பியல் காட்டும் பிரபஞ்ச நடனத்தின் மிகச்சிறந்த வடிவத்தை நான் நடராஜர் சிலையில் காண்கிறேன். ஒவ்வொரு அணுவின் இயக்கமும், பிரபஞ்சத்தின் உருவாக்கமும், அழிவும் அந்த நடனத்தில் அடங்கியுள்ளது.
8. பஞ்சபூதங்களின் இயக்கம்
அண்ட சராசரங்கள் அனைத்தும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனவை. நடராஜர் ஆடும் சிதம்பரம் ஸ்தலம் `ஆகாய’ ஸ்தலமாகும்.
கையில் உள்ள நெருப்பு – நெருப்பையும்,
காலடியில் மிதிப்படும் முயலகன் – நிலத்தையும்,
தலைமுடியில் பாயும் கங்கை – நீரையும்,
பறக்கும் சடைமுடி – காற்றையும்,
அவர் ஆடும் தில்லை அம்பலம் –
ஆகாயத்தையும் குறிக்கிறது.
அதாவது, பஞ்சபூதங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து பிரபஞ்சத்தை அவர் இயக்குகிறார் என்பதை இது காட்டுகிறது. அண்ட சராசரங்களின் இயக்கத்திற்கு மிக முக்கியமானது `காலம்’ (Time). நடராஜரின் வலக்கையில் இருக்கும் உடுக்கையின் ஒலிதான் காலத்தின் தொடக்கம். இடக்கையில் உள்ள நெருப்பு காலத்தின் முடிவு. அவரது சடையில் இருக்கும் பிறைச்சந்திரன் (வளர்பிறை, தேய்பிறை என்னும் கால மாற்றம்) உணர்த்துகிறது. சுருக்கமாகச் சொன்னால், இன்று அறிவியல் கண்டு பிடித்துள்ள “பிரபஞ்சத்தின் சுருங்குதல் மற்றும் விரிவடைதல்’’ (Expansion and Contraction of the Universe) என்ற தத்துவத்தை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் நடராஜரின் “படைத்தல் மற்றும் அழித்தல்’’ நடனமாக வடித்து வைத்துள்ளனர்.
9.கோயில் – சிதம்பரம்
ஆன்மிக உலகில் எத்தனையோ பிரம்மாண்டமான, வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்கள் இருந்தாலும், “கோயில்’’ என்ற ஒற்றைச் சொல் தில்லை நடராஜர் ஆலயத்தை மட்டுமே குறிக்கும் என்பது சைவர்களின் நம்பிக்கை. சிதம்பரம் ஏன் எல்லா ஆலயங்களுக்கும் மூல ஆலயமாக, “பூலோக கயிலாயமாக’’ போற்றப்படுகிறது என்பதற்குச் சைவ சித்தாந்தம் ஒரு சூட்சும விளக்கத்தைத் தருகிறது.
நம்முடைய உடலையே ஒரு கோயிலாக உருவகித்தால்:
திருவாரூர் – மூலாதாரத் தலம் (உடலின் அடிப்பகுதி)
திருவானைக்காவல் – சுவாதிஷ்டானம்
திருவண்ணாமலை – மணிபூரகம்
திருவாலங்காடு – அனாகதம்
திருவெண்காடு – விசுத்தி
சிதம்பரம் – ஆக்ஞா சக்கரம் மற்றும் சஹஸ்ராரம் (நெற்றிக்கண் மற்றும் தலைப்பகுதி)
மனித உடலின் உச்சக்கட்ட ஆன்மிக ஆற்றல் புள்ளியாகத் தலைப்பகுதி (சஹஸ்ராரம்) விளங்குவது போல, ஒட்டுமொத்த பூமிக்கும், எல்லா சிவாலயங்களுக்கும் முதன்மை ஆற்றல் மையமாக விளங்குவது சிதம்பரம். எனவேதான் இது “மூல ஆலயம்’’ என்று அழைக்கப்படுகிறது.
10. சிதம்பரமே இருதயம்
சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ள இடம், பூமியின் காந்தப்புலத்தின் மையப்புள்ளி (Magnetic Centre of the Earth) என்று நவீன அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். திருமூலர் தனது திருமந்திரத்தில், சிதம்பரம் நடராஜர் ஆடும் தில்லை அம்பலம் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் மற்றும் மனித உடலின் இதயப் பகுதி (ஹிருதய கமல தலம்) என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக எல்லாச் சிவாலயங்களிலும் கருவறையில் `சிவலிங்கம்’ தான் மூலவராக (மூலமூர்த்தியாக) இருக்கும். நடராஜர் போன்ற உருவத் திருமேனிகள் உற்சவராகவோ அல்லது தனிச் சபைகளிலோதான் இருப்பார்கள். ஆனால், உலகிலேயே சிதம்பரத்தில் மட்டும்தான் நடராஜப் பெருமான் உற்சவராக இல்லாமல், கருவறையிலேயே (பொன்னம்பலத்தில்) மூலமூர்த்தியாக வீற்றிருக்கிறார். லிங்க வடிவம் (சந்திரமௌலீஸ்வரர்) அங்கே மிகச் சிறியதாக, தினசரி வழிபாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பிரதான வழிபாடு முழுவதும் ஆனந்தத் தாண்டவ நடராஜருக்கே நடக்கிறது.
11. சிதம்பர ரகசியம்
சிதம்பரத்தில் நடராஜரின் பிரதான வடிவத்திற்குப் பக்கத்திலேயே, வெறும் தங்க வில்வ இலைகளால் ஆன மாலை மட்டுமே தொங்கவிடப் பட்டிருக்கும். அதுவே “சிதம்பர ரகசியம்’’ (அருவநிலை). அதாவது:
நடராஜர் – உருவ நிலை
ஸ்படிக லிங்கம் – அருவுருவ நிலை
வெற்று வெளி (ஆகாயம்) – அருவ நிலை
இந்த மூன்று நிலைகளும் ஒரே இடத்தில், மூலமூர்த்தியான நடராஜரின் சந்நதியிலேயே அமைந்திருப்பதால், இது உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் ‘தலைமையகம்’ அல்லது `மூல ஆலயம்’ தகுதியைப் பெறுகிறது. “தில்லைத் திருத்தலமே கோயில்’’ என்ற சைவத்தின் தாரக மந்திரம். இந்த நடராஜ மூர்த்திக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடக்கிறது.
12. நட்சத்திர அடிப்படையில் மூன்று அபிஷேகங்கள்
இந்த ஆறு அபிஷேகங்களில் மூன்று திதி அடிப்படையிலும், மூன்று நட்சத்திர அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு நடத்தப்படுகின்றன. நட்சத்திர அடிப்படையில் அமையும் 3 திருமஞ்சனங்கள் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மாதங்களின் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் நடைபெறும்:
*சித்திரைத் திருவோணம்:
சித்திரை மாதத்தில் வரும் `திருவோணம்’ நட்சத்திரத்தன்று நடக்கும் அபிஷேகம்.
*ஆனி உத்திரம்:
ஆனி மாதத்தில் வரும் `உத்திரம்’ நட்சத்திரத்தன்று நடக்கும் மகா அபிஷேகம் (இது தேவர்களின் மாலை சந்தி காலம்).
* மார்கழி திருவாதிரை:
மார்கழி மாதத்தில் வரும் `திருவாதிரை’ நட்சத்திரத்தன்று நடக்கும் ஆருத்ரா தரிசன மகா அபிஷேகம் (இது தேவர்களின் காலை சந்தி காலம்).
13. திதி அடிப்படையில் அமையும் 3 திருமஞ்சனங்கள்
இவை சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்பிறை `சதுர்த்தசி’ (பதினான்காம் நாள்) திதியில் நடைபெறும்.
* ஆவணி வளர்பிறை சதுர்த்தசி: ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசி அபிஷேகம்.
* புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி: புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசி அபிஷேகம்.
* மாசி வளர்பிறை சதுர்த்தசி: மாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசி அபிஷேகம்.
இந்த ஆறு காலங்களும் தேவர்களின் ஒரு நாளின் ஆறு கால பூசை களைக் குறிக்கின்றன. காலை, உச்சி, மாலை, இரவு என மனிதர்களாகிய நாம் தினமும் செய்யும் பூசைகளை, தேவர்கள் நடராஜருக்கு இந்த ஆறு நாட்களில் செய்கிறார்கள் என்பது ஐதீகம்.
14. இந்த ஆண்டு உற்சவ விவரம்
2026 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் 13 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஜூன், 14 – ஞாயிறு – இரவு – வெள்ளி சந்திர பிரபை வாகனம்
ஜூன், 15 – திங்கள் – இரவு – தங்க சூர்ய பிரபை வாகனம்
ஜூன், 16 – செவ்வாய் – இரவு – பூத வாகனம் (வெள்ளி)
ஜூன், 17 – புதன் – இரவு – வெள்ளி ரிஷப வாகனம்
ஜூன், 18 – வியாழன் – இரவு – வெள்ளி கஜ (யானை) வாகனம்
ஜூன், 19 – வெள்ளி – இரவு – தங்க கைலாச வாகனம்
ஜூன், 20 – சனி – இரவு – தங்க ரதத்தில் பிட்சாடனர்
முக்கிய நிகழ்வான தேரோட்டம், ஜூன் 21-ஆம் தேதியும், அதிகாலை 3:00 மணிக்கு, மகா அபிஷேகம் மற்றும் திரு ஆபரணக் காட்சி நடைபெறும். ஆனித் திருமஞ்சன தரிசன விழா ஜூன், 22 – திங்கள் அன்று நடைபெறுகிறது.
15. பதஞ்சலி ஆரம்பித்த விழா
சிவன் அபிஷேகப்பிரியன். எனவே லிங்க மேனியான சிவபெருமானுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடலரசன் நடராஜப் பெருமானுக்கே ஆண்டில் ஆறே அபிஷேகங்கள். அவற்றுள் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிதம்பரத்தில் பிரம்மோற்சவமாகவே கொண்டாடப்படுகின்றன.
மனிதர்களுக்கு உச்சிக் காலம் எப்படி முக்கியமோ, அதேபோல தேவர்களின் உச்சிக்கால வழி பாடான ஆனித் திருமஞ்சனம் மிக விசேஷமானது. வியாக்ரபாத முனிவருடன் இணைந்து பதஞ்சலி மகரிஷி சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார். தில்லை நடராஜர் ஆலயத்தின் வழிபாட்டு முறைகளையும், இந்த ஆனித் திருமஞ்சன விழாவுக்கான நெறிமுறை களையும் வகுத்துக் கொடுத்ததில் பதஞ்சலி மகரிஷிக்கு மிக முக்கியப் பங்குண்டு.
16. ஆனித் திருமஞ்சனம் காண பிறவி வேண்டும்
இந்து தர்மத்தில் பிறவி என்பது ஒரு பெருங்கடல். பிறப்பதும், இறப்பதும், மீண்டும் பிறப்பதுமான இந்தச் சுழற்சி ஆன்மாவிற்குப் பல்வேறு துயரங்களையும், கர்ம வினைகளையும் தருகிறது. அதனால்தான், “இனி ஒரு பிறவி வேண்டா நிலை’’ அல்லது “முக்தி’’ அடைவதையே மனிதப் பிறவியின் இறுதி இலக்காக ஞானிகள் கருதினர். அப்பர் பெருமான் இன்னும் ஒருபடி மேலே போய் தில்லையில் ஆனித் திருமஞ்சனமும், கூத்தனின் அழகையும் காண மனிதப் பிறவியல்லவா வேண்டும் என்று மனம் உருகுகிறார்.
“குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்தமா நிலத்தே!’’
17. திருமஞ்சனம் என்றால் என்ன?
மெய்யஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய் அஞ்சனம் எனில் இறைவனின் திருமேனிக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய் அஞ்சனம் என்ற சொல் மருவி திருமஞ்சனம் ஆயிற்று. பெருமாள் கோயில்களிலும் சிவாலயங்களிலும் இந்த திருமஞ்சனங்கள் விசேஷம். திருமஞ்சன பலன் அற்புதமானது. திருமஞ்சனத்திற்கு உதவுவதும், (பொருள்களை நம் சக்திக்கு ஏற்ப அளித்தல்) கலந்து கொள்வதும் நமது பாவங்களைப் போக்கும். புண்ணிய பலன்களை வாரி வழங்கும். இறைமேனியை திருநீராட்டம் செய்யும் போது அக்காட்சியை அவசியம் தரிசிக்க வேண்டும். அதனால்தான் சிதம்பரம் ஆனித் திருமஞ்சன விசேஷத்தை ஆனி தரிசனம் என்று அழைக்கிறார்கள்.
18. காணக் கண்கோடி வேண்டும்
சிவன் கோயில்களில் பொதுவாக மூலவர் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது திரை போட்டுவிடுவார்கள் அல்லது கருவறைக்குள்ளேயே நடப்பதால் பக்தர்கள் முழுமையாகப் பார்ப்பது அரிது. ஆனால், நடராஜப் பெருமானுக்குச் செய்யப்படும் திருமஞ்சனம் பக்தர்களின் கண் முன்னாலேயே, மிக பிரமாண்டமாக வெளிப் பிராகாரத்தில் (சபையில்) நடைபெறும். 36 வகையான நறுமணப் பொருட்கள், திரவியங்களால் ஆடல்வல்லானுக்குத் திருமஞ்சனம் நடப்பதையும், அதன்பின் அவர் ராஜ அலங்காரத்தில் காட்சியளிப்பதையும் நம் கண்களால் காண்பதே நம் பாவங்களைப் போக்கும். இறைவனின் திருமேனியைக் குளிர்விப்பதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளின் வெப்பம் தணிந்து, வாழ்வு குளிரும் என்பதே திருமஞ்சனத்தின் தத்துவமாகும்.
19. இறைவன் விரும்பும் இரண்டு விஷயங்கள்
திருஞானசம்பந்தர் திருமஞ்சனத்தைப் பற்றி தேவாரத்தில் பாடுகின்றார்;
“ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்
கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும்
பல் சடை பனிக்கால்
கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம் தொல் வினையே’’
இப்பாடலில் இறைவன் எப்பொழுதும் விரும்புகின்ற இரண்டு விஷயங்களை திருஞானசம்பந்தர் குறிப்பால் உணர்த்துகின்றார். அது என்னென்ன?
20. விரும்பித் தேர்ந்தெடுத்த இடம்
“ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்’’ – இறைவன் இயற்கையிலேயே தூய்மையானவன் (விமலன்). அவனுக்கு நாம் செய்யும் அபிஷேகம் என்பது நம்முடைய அகத்தைத் தூய்மைப்படுத்துவதற்காகவே. நறுமணமிக்க நெய், பால், தயிர் ஆகியவற்றால் இறைவன் அபிஷேகம் கண்டருள்வதை சம்பந்தர் முதல் வரியிலேயே போற்றுகிறார். ஆனித் திருமஞ்சனத்தன்று தில்லையம்பலத்தானுக்கு நடைபெறும் மகா அபிஷேகம் இதனையே கண்முன்னே நிறுத்துகிறது. அடுத்து அந்தணர்களைப் பிரியாத சிற்றம்பலம் என்கிறார்.
(“அந்தணர் பிரியாத சிற்றம்பலம் நாடினாய் இடமா’’) இறைவன் எங்கு வேண்டுமானாலும் உறையலாம்; ஆனால், அவன் விரும்பித் தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுமா? முக்காலமும் தன்னை மறவாது வழுத்தும் தில்லைவாழ் அந்தணர்கள் வாழ்கின்ற, அவர்களை விட்டு எப்போதும் நீங்காத தில்லைச் சிற்றம்பலத்தைத்தான்! அவனது முழுத் தோற்றமும், செயலும் அங்கே அருளை வாரி வழங்குகின்றன.
21. வினைகள் அனைத்தும் விலகும்
*அவன் வேதங்களையும், பலவகையான கீதங்களையும் பாடுபவன் (பாடினாய் மறையோடு பல் கீதமும்).
*நறுமணம் வீசும் கொன்றை மலரையும், குளிர்ந்த கதிர்களை வீசும் பிறைச்சந்திரனையும் தன் சடைமுடியில் சூடியிருப்பவன் (நறுங் கொன்றை நயந்தவனே… கதிர்
வெண் திங்கள் சூடினாய்).
இத்தனை அழகும் தில்லையில் ஆடும் அம்பலக் கூத்தனின் எழில் வடிவத்தில், நம் கண்களையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விஷயமாக இருக்கின்றன. ஆனித் திருமஞ்சன நன்னாளில் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற பேரொளியைத் தரிசிப்பதே பேரின்பம். திருமஞ்சனத்தைக் காண்பதாலும், சிந்திப்பதாலும் சம்பந்தர் பாடலின் இறுதி வரியில் வேண்டுவது போல, நம்முடைய பழைமையான வினைகள் அனைத்தும் சுருங்கி, முற்றிலும் அழிந்துபோகும் (“அருளாய் சுருங்க எம தொல் வினையே’’).
22. ஏன் தெற்கு நோக்கிநின்று ஆடுகிறார்?
கோயில் என்றால் சைவத்தில் சிதம்பரம். வைணவத்தில் திருவரங்கம். இந்த இரண்டு தலங்களிலும் நடராஜரும், திருவரங்கநாதரும் தெற்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்கள். எல்லாத் திருக்கோயில்களிலும் நடராஜ பெருமானின் திருவுருவம் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். இறைவன் தன்னை வழிபடும் அடியவர்களுக்கு தெற்கிலிருந்து வரும் எமனால் யாதொரு துன்பமும் நேரக்கூடாது; அவனைக் காக்க வேண்டும் என்பதற்காக தெற்கு நோக்கி ஆடுகின்றான் என்பர் பெரியோர். “என் அடியாரை அண்டாதே!’’ என்று காலனை எச்சரிக்கும் கருணை வடிவம் அது.
23. தமிழுக்காக தென்திசை
திருவிளையாடல் புராணம் இயற்றிய எழுதிய பரஞ்சோதி முனிவர் தெற்கு நோக்கி நடராஜப் பெருமான், ஆடுவதற்கு வேறு ஒரு காரணத்தைச் சொல்லுகின்றார் பொதிகை மலையில் பிறந்து வரும் குளிர்ந்த தென்றல் காற்றையும், அகத்தியருக்கு இறைவன் வாரி வழங்கிய இனிமையான தமிழ் மொழியையும் சுவைப் பதற்காகவே, வடக்கே கயிலாயத்தில் இருக்கும் பெருமான், தெற்கு நோக்கித் திரும்பி ஆடுகிறான் என்ற பரஞ்சோதி முனிவரின் கூற்று தமிழின் மீதான இறைவனின் காதலை உணர்த்துகிறது.
சைவத்தில் தெற்கு நோக்கி அமையும் இறை வடிவத்தை “தட்சிணாமூர்த்தி’’ (தென்முகக் கடவுள்) என்போம். தட்சிணம் என்றால் தெற்கு. நடராஜப் பெருமான் ஞானத்தையே நடனமாக ஆடிக்கொண்டிருக் கிறார். அமைதியாக அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானம் புகட்டிய தட்சிணாமூர்த்தி, உலக உயிர்களின் அறியாமை இருளைப் போக்க ஆனந்த தாண்டவமாக எழுந்து ஆடும் வடிவமே நடராஜர் வடிவம். எனவேதான் குரு வடிவான நடராஜரும் தெற்கு நோக்கித் திகழ்கிறார்.
24. ஏன் முகம் சாய்ந்து இருக்கிறது?
நடராஜப் பெருமான் திருவுருவத்தை உற்று கவனிக்கும் பொழுது அவருடைய முகமானது சற்று சாய்ந்து நிற்கும். கலைஞர்கள் அப்படித்தான் அவருடைய திருவுருவத்தைச் சமைப்பார்கள். நடராஜர் பெருமானின் திருமுகம் சிவகாமி அம்மையை நோக்கும். இங்ஙனம் அம்பிகையை நோக்கி இறைவன் திருநடனம்புரியும் இயல்பு குறித்து குமரகுருபரர் அழகாக ஒரு பாடலில் விளக்குகின்றார். குழந்தையின் குடலானது மிக எளிதாக மருந்தைச் செரிக்காது.
அதனால் தாய் மருந்தைத் தான் உண்டு, அதன் பிறகு தன் பால் வழியாக, குழந்தை பெறும்படி செய்து நோயைப் போக்குவாள். அதைப் போல அம்பிகை, நடராஜப் பெருமானின் திரு நடனத்தை முதலில் தான் தரிசித்து, அதனுடைய பயனை, இந்த உலக உயிர்கள் அடையும்படி செய்வாள். அதனால் ஆனித் திருமஞ்சனத்தின் போது சிவகாமி அம்மனோடு அவர் முகம் நோக்கியே இருக்கின்றார்.
25. ஆறுகால பூஜைகள்
சிதம்பரம் அற்புதமான கோயில். ஆறு என்பது இங்கு சிறப்பு. ஆண்டு தோறும் ஆறு அபிஷேகங்கள் போலவே நித்யம் ஆறு கால பூஜைகள் நடந்து வருகின்றன முதலில் இந்த ஆறு கால பூஜைகள் பற்றி விவரங் களைத் தெரிந்து கொள்வோம் காலை 6.30க்கு திருவனந்தல் என்னும் பால் நைவேத்தியம் நடைபெறும். இதைக் காண்பது பெரும் பேறு என்பதால் இந்தப் பூஜைக்கு நிறைய அன்பர்கள் வருவார்கள். அதற்குப் பிறகு காலை எட்டு முப்பது மணிக்கு முதல் காலம் (காலை சந்தி) நடைபெறும். இரண்டு மணி நேரம் கழித்து 10:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெறும். 12 மணிக்கு உச்சி காலம் நடந்து நடை சாத்தப்படும். மாலை 6 மணிக்கு சாயரட்ஷை பூஜை நடைபெறும். பூஜைக்கு அன்பர்கள் திரண்டு வருவார்கள். இரவு 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை. இரவு 10 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.
26. ஐந்து சபைகள்
தில்லையில் தினசரி ஆறு காலங்களிலும் சந்திரமவுலீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெறும். நடராஜர் சந்நதியில் 16 வகை தீபாராதனைகளும் நடைபெறும். ஐப்பசி மாதத்து பூரத் திருவிழாவில் சிவகாமி அம்மைக்கும் பங்குனி மாதத்து உத்தர திருவிழாவில் பாண்டியன் நாயகர் கோயில் சுப்பிர மணிய சுவாமிக்கும் கொடியேற்றம் முதலாக பத்து நாள் விழா நடைபெறும். கார்த்திகை தீபம் தைப்பூசம் முதலிய நாட்களில் ஐம்பெரும் கடவுளர் திருவீதிக்கு எழுந்தருளுவர்.
கந்தர்சஷ்டி விழாவில் சூரசம்காரம் நடைபெறும். ஒவ்வொரு பிரதோஷத்திலும் திருவாதிரையிலும் இடப வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவர். தில்லை பெருங்கோயிலில் 5 சபைகள் இருக்கின்றன. நடராஜமூர்த்தி எழுந்தருளி அருள் பாலிக்கும் கருவறைக்கு சிற்சபை என்று பெயர். நடராஜருக்கு சபாபதி என்று திருநாமம். அதற்கு பக்கத்தில்தான் சிதம்பர ரகசியம் இருக்கிறது. நந்திகேஸ்வரர் இருப்பது கனகசபை. அதன் மேல்கூரைதான் பொன்னால் வேயப்பட்டு இருக்கிறது.
27. சேக்கிழாருக்கு முதல் அடி எடுத்துத் தந்த இடம்
அடுத்து, 3000 தேர் உருவம் உள்ள சபை. ஊர்த்துவ தாண்டவம் உள்ள சபை நிருத்த சபை என்று பெயர். நடராஜருக்கு நேர் எதிரே கொடிமரம் தாண்டி உயரமாக இருக்கிறது. நடராஜர் சந்நதிக்கு வெளியே உள்ள பிராகாரத்தில் தேவசபை உள்ளது. இங்குதான் தீட்சிதர்கள் சபை கூடுவார்கள். உற்சவமூர்த்தி ஆபரணங்கள் இருக்கக்கூடிய இடமும் இதுதான். சுந்தரர் வழக்கை தீர்த்ததும் “பித்தா பிறைசூடி” என்ற தேவாரத்தைப் பாடியதும் இங்குதான்.
இதற்கு வெளியிலே உள்ள பிராகாரத்தில் இருப்பது ஆயிரங்கால் மண்டபம் என்று சொல்லப்படும். ராஜசபை எனப்படும் இங்குதான் நடராஜப் பெருமாள் மார்கழி திருவாதிரையிலும் ஆனி உத்திரத்திலும் திருமஞ்சனம் செய்து கொள்ளுகின்றார். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’’ என்று முதல் அடி எடுத்துக் கொடுத்து, திருத்தொண்டர் புராணம் எழுதும் படி சேக்கிழாரை நியமித்த இடமும் இதுதான்.
28. நடராஜர் அபிஷேகம் எப்படி நடக்கும்?
சிதம்பரம் ஆனித் திருமஞ்சன விழாவில் முதல் நாள் முதல் எட்டாம் திருவிழா வரை உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் முதலிய பஞ்ச மூர்த்திகளும் வாகனங்களில் எழுந்தருள்வர். ஒன்பதாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்த பின்னர் இரவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார்.
ஆனி உத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் பல மணி நேரம் விமரிசையாக நடைபெறும். இதற்காக பல ஊர்களிலிருந்து மட்டும் அல்ல, பல நாடுகளிலிருந்தும் வந்து தரிசிப்போர் உண்டு. அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும்.
29. ஆடி வரும் நாட்டியம்
உச்சி வேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். அப்போது பல்வேறு மங்கல வாத்திய ஓசைகள், நமக்கு கைலாயத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை உண்டாக்கும். பின் மகாதீபாராதனை நடக்கும். இரவு யாகசாலையில் பத்து நாட்களாக வைத்து வழிபாடு இயற்றிய கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு வந்து சபையில் உள்ள ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் மரபு.
பின்னர் சுப்ரமணியர் முன்னிலையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்னர் சுப்பிரமணியர், அஸ்திராஜர் ஆகிய இருவரும் வீதிவலம் செல்ல, ஆசாரியர்கள் திக்குகளுக்கு உணவு பலியிட்டு விழாவை இனிது முடித்து வைப்பர். திரு விழாவில் பங்கு பெற்ற மூர்த்திகள் விடைபெறும் விழா விடையாற்றி உற்சவம் தில்லையில் 11ஆம் நாள் இரவு நடைபெறும். ஆனி மாதத்தில் சோமாஸ்கந்தர் சிவானந்தவல்லி சுப்பிரமணியர் மூவர் மட்டுமே முறையே இந்திர விமானம், பல்லக்குகளில் எழுந்தருளி வீதி வலம் வருவர்.
30. சிதம்பரம் தவிர இதர தலங்களிலும் ஆனித்திருமஞ்சனம்
ஆவுடையார் கோயில் (திருப்பெருந்துறை)
மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட இந்தத் தலம் ஆனித் திருமஞ்சனத்திற்குப் பெயர் பெற்றது. இங்கு ஆனித் திருமஞ்சனப் பெருவிழா மாணிக்கவாச கருக்கான மகோற்சவமாக 10 நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனி உத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு இறைவன் குருந்த மரத்தடியில் உபதேசம் செய்த “குருபூஜை’’ நாளாகவும் இது அமைவதால், இங்கு இத்திருவிழா அக்னி நட்சத்திர வெம்மை தணியும் பொருட்டு பேரபிஷேகமாக நடக்கும்.
மதுரை (வெள்ளி சபை)
ஐம்பெரும் சபைகளில் மதுரை “வெள்ளி சபை’’ ஆகும். உலகெங்கும் இடது காலைத் தூக்கி ஆடும் எம்பெருமான், மதுரையில் மட்டும் வலது காலைத் தூக்கி “கால் மாற்றி ஆடிய’’ கோலத்தில் காட்சி தருகிறார். தன் அடியவனான ராஜசேகர பாண்டியன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காக, ஒற்றைக் காலில் ஆடினால் இறைவனுக்கு வலிக்குமே என்று உருகிய அவனது அன்புக்காக, கால் மாற்றி ஆடிய கருணைத் தலம். இதனால் இத்தலத்து ஆனித் திருமஞ்சனத் தரிசனம் காண்போரின் பாவங்களைப் போக்கவல்லது.
திருவாலங்காடு (ரத்தின சபை)
பஞ்ச சபைகளில் இது “ரத்தின சபை’’. சென்னைக்கு அருகில் திருவள்ளூர் வட்டத்தில் உள்ளது. காளியுடன் போட்டி போட்டுக்கொண்டு எம்பெருமான் “ஊர்த்துவ தாண்டவம்’’ (காலை செங்குத்தாக தலைக்கு மேல் தூக்கி ஆடுதல்) ஆடிய தலம். காரைக்கால் அம்மையார் தன் தலையாலேயே நடந்து வந்து, பெருமானின் திருவடிக்குக் கீழே என்றும் வாழும் பேறு பெற்ற இடம். இங்கு ஆனித் திருமஞ்சனத்தன்று வான் உலகத் தேவர்களே வந்து ரத்தின சபையில் ஆடும் பெருமானை அபிஷேகித்து வழிபடுவதாக ஐதீகம்.
பேரூர் (அருள்மிகு பட்டீஸ்வரர்திருக்கோயில், கோவை)
சிதம்பரம் போலவே இங்கும் பொற்சபை உள்ளது. இங்குள்ள நடராஜ மூர்த்தம் சிற்பக்கலையின் உச்சம்! பெருமானின் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புவது போலவும், சடைமுடிகள் காற்றில் பறப்பது போலவும், காலில் உள்ள நரம்புகள் கூடத் தெரியும் வகையிலும் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்து நடராஜரைச் செதுக்கிய சிற்பி, இதன் அழகில் மயங்கி “இதற்கு மேல் என்னால் ஒரு சிலை வடிக்க முடியாது’’ என்று தன் கை விரல் களையே வெட்டிக்கொண்டார் என்றொரு வரலாறும் உண்டு. இத்தகைய பேரழகு மிக்க இறைவனுக்கு நடக்கும் ஆனித் திருமஞ்சனம் கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருக்குற்றாலம் (அருள்மிகுகுற்றாலநாதர் திருக்கோயில்)
ஐம்பெரும் சபைகளில் இது “சித்திர சபை’’. தென்காசிக்கு அருகில் உள்ளது. இங்கு நடராஜப் பெருமான் ஐம்பொன் சிலையாகவோ அல்லது கல் திருவுருவமாகவோ காட்சி தருவதில்லை. மாறாக, சித்திர வடிவில் (ஓவியமாக) சுவர் ஓவியமாக எழுந்தருளி ஆடுகிறார். மூலிகை வண்ணங்களால் தீட்டப்பட்ட பிரம்மாண்டமான ஓவிய வடிவிலான நடராஜருக்குத் தான் இங்கு வழிபாடுகள் யாவும். ஆனித் திருமஞ்சனத்தன்று இந்தச் சித்திர சபையில் நடக்கும் அபிஷேகங்களும், வழிபாடுகளும் முற்றிலும் மாறுபட்ட, தெய்வீகக் கலைநயம் மிக்க அனுபவத்தைத் தரக்கூடியவை.
திருவெண்காடு (அருள்மிகுசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்)
சீர்காழிக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற இத்தலம் “ஆதி சிதம்பரம்’’ என்று அழைக்கப்படுகிறது. நடராஜப் பெருமான் முதன்முதலில் தனது ஆனந்தத் தாண்டவத்தைத் தொடங்கிய இடமே திருவெண்காடுதான் என்பது ஐதீகம். சிதம்பரத்திற்கு முன்பே இங்கு நடனமாடியதால் இது ஆதி சிதம்பரம். இத்தலத்து நடராஜரின் சிலா ரூபம் மிகவும் பழமையானது மற்றும் தனித்துவமானது. இங்கு ஆனித் திருமஞ்சனப் பெருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.
எஸ். கோகுலாச்சாரி
