சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையை 800க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய வருகைப்பதிவு செயலி முறையால் சம்பளம் பறிபோனதாகக் கண்ணீர் விட்டு கதறினர். தொடர்ந்து, ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதார மையங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட நிலையில், அதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டது. டிஜிட்டல் முறையிலான புதிய செயலி முறையில் வருகைப் பதிவு நடைமுறை வரும் ஜூன் மாதத்திலிருந்து தான் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் மே மாதத்திலேயே இந்த புதிய செயலி நடைமுறைப்படுத்தப்பட்டதால், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாகப் பலருடைய வருகைப்பதிவு விடுபட்டுள்ளது. இந்நிலையில், புதிய செயலி முறையில் வருகைப் பதிவு கணக்கிடப்பட்டு மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்பட்டதால் பலருக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த ஒப்பந்த அடிப்படையிலான 800க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தை முற்றுகையிட்டு நேற்று காலை முதல் அதிரடியாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: மொபைல் ஆப் மூலமான புதிய வருகைப்பதிவு முறையின்படி, பணி நேரத்திற்கு மேல் 15 நிமிடங்கள் தாமதமாகப் பதிவு செய்தாலும், ஒரு நாளின் பாதியளவு சம்பளம் உடனடியாகப் பிடித்தம் செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக எங்களுக்குச் சம்பளமே வரவில்லை. ஒரு மாத முழு உழைப்பிற்கு வெறும் ரூ.500, ரூ.3000 மட்டுமே வங்கி கணக்கில் ஏறியுள்ளது. இதை வைத்துக் கொண்டு நாங்கள் எப்படி வாழ்வது?. தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு செவிலியர்களுக்கு ரூ.30,000 முதல் 35,000 வரை நிதி ஒதுக்கீடு செய்தாலும், மாநகராட்சி எங்களுக்கு வெறும் ரூ.18,000 முதல் ரூ.19,000 மட்டுமே வழங்குகிறது.
ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலுள்ள கடுமையான புதிய வருகைப்பதிவு முறையைக் கைவிட வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட சம்பளப் பாக்கியை முழுமையாக வழங்க வேண்டும். பெண் பணியாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிடிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கவும், மருத்துவ பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால், தொடர்ந்து 6மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
