டெல்லி: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.1.23 லட்சம் கோடி நிதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்ததால் ஏற்பட்ட இழப்பை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் சுமையிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு (OMCs) ஒன்றிய அரசு சுமார் 1.23 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கிய முதல் 78 நாட்களுக்கான காலப்பகுதிக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலால் வரி குறைப்பும் அடங்கும் என கூறப்பட்டு உள்ளது.
1.23 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி யானது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வால் ஏற்பட்ட செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நுகர்வோர் மீது முழு விலை உயர்வைத் திணிக்காமல், அதே நேரத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையும் சரியாமல் இருப்பதை அரசு உறுதி செய்கிறது. இது குறித்து தகவல் தெரிவித்து இருக்கும் அரசு அதிகாரிகள் உலகளாவிய எரிசக்தி விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், லாப வரம்புகளை நிலைநிறுத்தவும், இழப்புகளைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
சமீபத்தில் நாடு முழுவதும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட பிறகும் கூட எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு சுமார் ரூ.652 கோடி இழப்பைச் சந்தித்து வருவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் தான் மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவும் , எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய கடுமையான உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1.23 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
