×

கன்னியாகுமரியில் கலெக்டர் பாராகிளைடரில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சாகசம்

கன்னியாகுமரி, மார்ச் 7: கன்னியாகுமரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பாராகிளைடரில் பறந்தபடி விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சியை நடத்தினார். தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகளிலும், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பாராகிளைடரில் வானில் பறந்தபடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாகச நிகழ்ச்சியை நடத்த மாவட்ட தேர்தல் அலுவலகம் முடிவு செய்தது.

அதன்படி நேற்று மாலை சாகச விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி சன்செட் பாயின்ட் கடற்கரை பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார். அதன்பிறகு கலெக்டர் அரவிந்த் பாராகிளைடர் மூலம் ஆகாயத்தில் பறந்தபடி ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களை பறக்க விட்டார்.  பின்னர் நாகர்கோவில் கோட்டாறு சமரசவீதியை சேர்ந்த பள்ளி மாணவி மதுதீஷா பாராகிளைடர் மூலம் பறந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் ரஜினி, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல்அலுவலர் சத்தியதாஸ் விவேகானந்தா கல்லூரி மற்றும் ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanyakumari ,Awareness Campaign ,Adventure ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...