×

வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, தங்கள் வசம் கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய தனியார் செல்போன் நிறுவன இன்ஜினியர் கைது: உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வலை

அம்பத்தூர்:  அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சமீப காலமாக பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவை சரிவர செயல்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் அடிக்கடி கொரட்டூர் வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். இந்நிலையில், கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ, தனியார் கல்லூரி அருகே உள்ள பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை நேற்று காலை மர்மநபர் திறந்து பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கொரட்டூர் பிஎஸ்என்எல் டெக்னீஷியன் அப்பன்ராஜ், அந்த நபரிடம் சென்று, ‘‘நீங்கள் யார், இங்கு என்ன செய்கிறீர்கள்,’’ என கேட்டார். அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதையடுத்து, இணைப்பு பெட்டி அருகில் சென்று பார்த்தபோது, அந்த நபர் இணைப்பு பெட்டிலிருந்த வயர்களை சேதப்படுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரை பிடித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், கொரட்டூர் பகுதி பிஎஸ்என்எல் உதவி பொறியாளர் நானி இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் அயனாவரம் பாரத மாதா தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் (40) என்பதும், தனியார் செல்போன் நிறுவன இன்ஜினியர் என்பதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர், பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியில் இருந்து வயர்களை துண்டித்து வாடிக்கையாளர்களின் தொலைபேசி, இணையதள சேவையை தடுத்து நிறுத்தி உள்ளார். எதற்காக அப்படி செய்தார் என போலீசார் கேட்டபோது, பிஎஸ்என்எல் சேவையை மோசமானதாக மாற்றினால், தங்களது செல்போன் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பதால், அப்படி செய்தேன், என தெரிவித்துள்ளார். இவர்தான், பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை அடிக்கடி சேதப்படுத்தியவர் என்பதும் தெரியவந்தது. இதில், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகள், ஊழியர்களும் ஈடுப்பட்டது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாஷை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகளை  தேடுகின்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...