டெல்லி: விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் முழு சூரிய கிரகணம் குறித்த முக்கிய தகவல்களையும், அதைக் காண்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
இந்த அரிய முழு சூரிய கிரகணம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று நிகழவுள்ளதாக நாசா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த விண்வெளி நிகழ்வு கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யாவின் சில பகுதிகள் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் முழுமையாகத் தெரியும் என்றும், இந்தியாவில் இதனை நேரடியாகக் காண முடியாது என்றாலும் விண்வெளி ஆர்வலர்கள் நாசாவின் நேரலை தளம் மூலம் இதைக் கண்டுகளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் நீடிக்கும் கால அளவு, மக்கள் கிரகணத்தைக் காணும் இடத்தைப் பொறுத்து மாறுபடும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த முழு சூரிய கிரகணப் பாதையில் இருக்கும் பெரும்பாலான பகுதிகளில், சூரியன் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரமே முழுமையாக மறைந்திருக்கும் என்றும், கிரீன்லாந்து, ரஷ்யா அல்லது வட அட்லாண்டிக் பெருங்கடலின் மையப் பகுதிக்கு அருகில் இருப்பவர்களுக்கு இந்த முழு கிரகண நிலை சற்று கூடுதல் நேரம் நீடிக்கும் என்றாலும், அதுவும் இரண்டுரை நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு சூரிய கிரகணத்தின் போது பல்வேறு அரிய வானியல் மாற்றங்களை நாம் காண முடியும். நிலவின் இருண்ட பகுதிக்கு பின்னால் சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கொரோனா’ பகுதி ஒரு மங்கலான ஒளிவட்டமாக நம் வெறும் கண்களுக்குப் புலப்படும் என்றும், இந்த சில நிமிடங்களில் சுற்றுப்புற வெப்பநிலை சற்றே குறையும் என்றும் நாசா கூறியுள்ளது. மேலும், பகல் நேரத்திலேயே வானம் சட்டென்று இருண்டு போவதால், விண்வெளியில் உள்ள சில கோள்கள் வழக்கத்தை விடப் பிரகாசமாகத் தெரியக்கூடும் என்றும் விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாசா பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. பகுதி நேர கிரகணத்தின் போது, தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகள் இன்றி சூரியனை நேரடியாகப் பார்த்தால் கண்களில் உடனடி மற்றும் நிரந்தரப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், சூரியன் முற்றிலும் மறையும் அந்த சில நிமிடங்களில் மட்டுமே தற்காலிகமாகப் பாதுகாப்பு கண்ணாடியைக் கழற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முழு கிரகண நிலைக்கு முன்னரும் பின்னரும், சூரியனின் பகுதி நேரக் கட்டங்களை மக்கள் காணும்போது கண்டிப்பாகப் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நாசா தன் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. நிலவு சூரியனை முழுமையாக மறைக்காத நேரத்தில் வெறும் கண்ணால் பார்ப்பது ஆபத்தானது என்பதால், பார்வையாளர்கள் சூரியக் கதிர்களைப் பாதுகாப்பாகக் காண வடிவமைக்கப்பட்ட ‘எக்லிப்ஸ் கிளாசஸ்’ எனப்படும் பிரத்யேக கண்ணாடிகள், கைக்கடக்கமான சோலார் வியூவர்ஸ் அல்லது சூரிய ஒளியின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி கண் பாதிப்பைத் தடுக்கும் சான்றளிக்கப்பட்ட சோலார் ஃபில்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது.
