×

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி, மார்ச் 6: தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமூகநோய் தடுப்புத்துறை தலைவர் சுனிதா கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது: ‘தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகிறது. 1050 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குசாவடிகள் அனைத்தும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் 1603 வாக்குசாவடிகள் இருந்த நிலையில், தற்போது அது 2ஆயிரத்து 903ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குசாவடிக்கு வரும் வகையில் தன்னார்வலர்களை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.  80வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யும்போது பாலிதின் கையுறைகள் அணிவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1903 வாக்குசாவடிகளில் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளார்கள்.  மேலும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர், 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்களும் என கிட்டத்தட்ட 19ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும்.வாக்குசாவடியில் பணியாற்றும் போது சாணிடைசர் பயன்படுத்த வேண்டும். அவசியம் முககவசம் அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.  மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், துணை கண்காணிப்பாளர் குமரன், கோவேக்சின் தடுப்பூசி ஒருங்கிணைப்பாளர் மாலையம்மாள் மற்றும் ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Collector ,Senthilraj ,Corona Vaccine Mandatory Consultative Meeting ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...