திருப்புவனம்: திருப்புவனம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியதில் சிறுவன் உட்பட 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் புறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த டிரைவர் சுரேஷ்குமார் (45) பஸ்சை ஓட்டினார். சுமார் 40 பயணிகள் பஸ்சில் இருந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நான்குவழிச் சாலையில் நரிக்குடி பிரிவு பகுதியில் மாலை 6.30 மணியளவில் பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பெரிய பள்ளத்தில் இறங்கி நின்றது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் சுரேஷ்குமார், கண்டக்டர் சுரேஷ் (40), ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி (45), பரமக்குடியை சேர்ந்த பத்மா (38), ஹரீஸ் (16), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த முருகேசன்(53), மதுரையை சேர்ந்த ஜெயஸ்ரீ(21) உட்பட மொத்தம் 15 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்புவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
