×

மோசடி புகாரில் சிக்கிய நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு செய்தது எப்படி? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் நடந்ததாக செபி (இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்) குற்றம் சாட்டி, அதன் விவகாரங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியதை அடுத்து, அந்நிறுவனத்தில் எல்ஐசி செய்த முதலீட்டை காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

தங்கம் மற்றும் நகை வணிகத்தில் ஈடுபட்டு வரும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்ததாக, செபியின் 2026 ஜூன் 3 இடைக்கால உத்தரவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு காலக்கட்டத்தில், ரூ.15 லட்சம் கோடி என்ற மலைக்க வைக்கும் அளவிலான வருவாய் தவறாகக் காட்டப்பட்டுள்ளது என்று செபி கூறியுள்ளது. இது பிரமிக்க வைக்கும் ஒரு எண்ணிக்கை.

விசாரணைகள் தொடர்கின்றன. இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் எல்ஐசி சுமார் 10.8% பங்குகளை வைத்திருப்பது கவலையளிக்கிறது. தனக்குக் கணிசமான பங்கு உள்ள ஒரு நிறுவனத்தில் நடந்த இவ்வளவு பெரிய மோசடியை எல்ஐசி எப்படி கவனிக்கத் தவறியது? இவ்வளவு பெரிய பங்குகளை எல்ஐசி கையகப்படுத்தியது, ஆளும் கட்சிகளின் அறிவுறுத்தல்களால் உந்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

நிதிநிலை அறிக்கைகளில் பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், நிதியைத் திசை திருப்பியதாகவும் குற்றம் சாட்டி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் மேத்தாவை அந்நிறுவனத்தின் பத்திரங்களில் வர்த்தகம் செய்வதிலிருந்து செபி தடை செய்துள்ளது.

Tags : LIC ,Congress ,New Delhi ,Securities and Exchange Board of India ,SEBI ,Rajesh Exports Limited ,Congress party ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...