×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட், அறைகள் பெற்று தருவதாக மோசடி: 2 பேர் அதிரடி கைது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட், அறைகள் பெற்று தருவதாக மோசடி செய்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனராவ். இவரிடம் சில தினங்களுக்கு முன், தேவஸ்தான ஊழியர்கள் எனக்கூறிய 2 பேர் ஸ்ரீவாணி டிக்கெட் மற்றும் அறைகள் பெற்று தருவதாக கூறி ரூ.51,800 பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து திருமலை 2வது டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி நீக்கப்பட்ட சங்கரய்யா(47), வெங்கடரமண நாயக்(48) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்தனர்.

இதில், சங்கரய்யா திருமலை தேவஸ்தான ஊழியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது செல்போன் மூலம் பக்தர்களை தொடர்புகொண்டு, ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,500 செலுத்தினால் விஐபி டிக்கெட்டுகள், அர்ச்சனை சேவை, தோமாலை சேவை மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குவதாக கூறி பணம் பெற்றுள்ளார். அவர்களிடமிருந்து ரூ.11,800, 2 செல்போன்கள், வங்கி பாஸ்புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பதி சிறையில் அடைத்தனர்.

Tags : Tirupati ,Tirupati Ezhumalaiyan ,Mallikarjuna Rao ,Vijayawada, Andhra Pradesh ,Srivani… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...