×

கேரளத்தில் ரூ.5.07 லட்சம் கோடி கடன்: சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டார் முதல்வர் வி.டி.சதீசன்

திருவனந்தபுரம்: கேரளத்திற்கு மொத்தம் 5.07 லட்சம் கோடி கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக கடந்த இடதுசாரி கூட்டணி அரசில் நிதி அமைச்சராக இருந்த கே.என். பாலகோபால் கூறினார். இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் கேரளத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் வி.டி. சதீசன் கூறியிருந்தார்.

இதன்படி நேற்று அவர் சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு: கேரளத்தின் மொத்த கடன் 5.07 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடுமையான கருவூல நெருக்கடிக்கு இடையே கேரளம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. மாநிலத்தின் மொத்த வருமானத்தில் 77 சதவீதம் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகிய கட்டாய தேவைகளுக்காக செலவாகிறது.

மேலும் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த நஷ்டம் ரூ.78,851 கோடியாக உயர்ந்துள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குறைவு மற்றும் ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டு தொகை நிறுத்தப்பட்டது ஆகியவற்றால் கஜானா காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 15வது நிதி ஆணையத்தின் காலத்தில் பெறப்பட்ட வருவாய் பற்றாக்குறை மானியம் நிறுத்தப்படுவதால் வருவாயில் ரூ. 20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும். ஒன்றிய அரசின் வரி வருவாயில் கேரளத்தின் பங்கு குறைந்து வருவது பொருளாதார ஏற்றத்தாழ்வை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala ,Chief Minister ,V.D. Satheesan ,Thiruvananthapuram ,K.N. Balagopal ,Finance Minister ,Left ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...