×

கோஸ்சுவாமியும் பரிசமணிக்கல்லும்

கண்ணனிடம் எல்லையற்ற பக்தி கொண்டவர் அவர். கோகுலத்தை ஒட்டி இருந்த பிருந்தாவனத்தில் அமர்ந்து, கண்ணனைத் தியானித்துக் கொண்டிருந்தார். அவர் பெயர்தான் கோஸ்வாமி. அந்த நேரத்தில் அவரைத் தேடி ஓர் ஏழை வந்தார். வந்தவர், கோஸ்வாமி தியானம் கலையும் வரையில் பொறுமையாக இருந்து, அவர் தியானம் கலைந்த பிற்பாடு வணங்கினார். அவரைப் பார்த்த சுவாமி, ‘‘எங்கிருந்து வருகிறாய்?’’ என அன்போடு கேட்டார்.

‘‘சுவாமி! என் பெயர் ஜீவனன். வர்த்தமான மாவட்டத்தைச் சேர்ந்தவன். தங்களைத் தரிசிப்பதற்காக வந்திருக்கிறேன்’’ என்றார். சுவாமி வியந்தார்; ‘‘என்னைத் தரிசிக்கவா? நீ சொல்லும் இடம் மிகவும் தொலைதூரமாயிற்றே! அவ்வளவு தூரத்தில் இருந்தா, என்னைத் தரிசிக்க வந்திருக்கிறாய்?’’ எனக் கேட்டார். ஏழை பதில் சொன்னார்; ‘‘சுவாமி! வறுமை என்னை மிகவும் துன்பப் படுத்துகிறது. தாங்க முடியவில்லை. எப்படியோ ஒரு வழியாகக் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறேன். அதைத் தாங்கள்தான் போக்கி அருள வேண்டும்’’ என்று வேண்டினார். சுவாமி பதில் கூறினார்; ‘‘வறுமை என்பது பாவம் இல்லை. வறுமையிலும் மனிதன் வாய்மை உடையவனாக, ஒழுக்கத்தில் சிறந்தவனாக, தெய்வபக்தி மிகுந்தவனாக வாழ முடியும்’’ என்றார். ஆனால் ஜீவனன் தன் மனக்குமுறலை
அப்படியே விவரித்தான்;

‘‘சுவாமி தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். இருந்தாலும் தாங்கள்தான் அதைப் போக்கி அருள வேண்டும். நான் ஒரு சிவபக்தன். என் வறுமையைப் போக்கச் சிவபெருமானிடம் வேண்டினேன். என்னைத் தங்களிடம் அனுப்பினார்’’ என்றார் ஏழை. சுவாமி வியந்தார்; ‘‘சிவபெருமான் என்னிடம் அனுப்பினாரா? எப்படி?’’ என்று கேட்டார். ஏழை பதில் சொன்னார்;

‘‘சிவபெருமான் ஒருநாள் என் கனவில் தோன்றினார். `ஜீவனா! உன் ஆசை நிறைவேறும் காலம் வந்துவிட்டது. யமுனைக் கரையிலே கோசுவாமி என்று ஒரு துறவி இருக்கிறார். நீ அவரிடம் போ! அவரை உன் தந்தையாகப் போற்றி வணங்கு! உன் வறுமையைப் போக்குவார் அவர்’ என்றார். சுவாமி! சிவபெருமான் பொய் சொல்லுவாரா? உங்களிடம் ஏதோ இருப்பதால் தானே, என்னை உங்களிடம் அனுப்பி இருக்கிறார்!’’ என்றார் ஏழை. ஒரு சில வினாடிகள்தான்! சுவாமியின் முகம் மலர்ந்தது;

‘‘உண்மை உண்மை.. இப்போதுதான் நினைவு வருகிறது. நான் யமுனைக் கரையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, பரிசமணி என்று ஓர் அதிசயக் கல் கிடைத்தது. தொட்டதை எல்லாம் தங்கமாக்கும் ஆற்றல் அந்தப் பரிசமணிக் கல்லுக்கு உண்டு. சரி! இது யாருக்காவது எப்போதாவது உபயோகப்படலாம் என்று நினைத்து, இந்த ஆற்று மணலிலேயே அதைப் புதைத்து வைத்தேன். வந்தாய் நீ! எடுத்துக்கொள்! உன் வறுமை இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடும்’’ என்றார் சுவாமி. ஏழைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை; சுவாமி குறிப்பிட்ட இடத்தில் தோண்டி அந்தப் பரிசமணிக் கல்லை எடுத்தான்.

அப்போது அவன் கையில் இரும்பாலான ஒரு தாயத்து அணிந்திருந்தான். பரிசமணிக் கல்லை அவன் எடுத்தபோது, அது அவன் அணிந்திருந்த இரும்புத் தாயத்தின் மேல் பட்டது. அதே வினாடியில் அந்த இரும்புத் தாயத்து தங்கமாக மாறியது. ஏழை வியப்பின் உச்சிக்குப் போனான்; ‘‘இப்படிப்பட்ட அபரிமிதமான சக்தி கொண்ட இந்தப் பரிசமணி கல்லை ஒருவர் ஒதுக்கி இருக்கிறார் என்றால், அவரிடம் இதைவிட இன்னும் சக்தி வாய்ந்தது ஏதாவது இருக்க வேண்டும். அதைப் பெறுவதை விட்டுவிட்டு, இதை விரும்பலாமா?’’ என்று நினைத்தார். மிகுந்த சக்தி வாய்ந்த பரிச மணிக் கல்லை அங்கேயே போட்டுவிட்டு, வேகமாக துறவியிடம் ஓடினார் ஏழை; துறவியை வணங்கி, ‘‘சுவாமி! இந்தப் பரிசமணிக்கல்லைவிடப் பெரிய பொருள் உங்களுக்கு ஏதோ கிடைத்திருக்கிறது. அதனால்தான், இதைத்தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்குக் கிடைத்த அந்தப் பொருளை எனக்குக் கொடுக்க வேண்டும்’’ என்று நிர்பந்தப்படுத்தினார். பார்த்தார் சுவாமி. அவரை அறியாமலேயே மென்மையாகப் புன்முறுவல் பூத்தார்.

அதே சமயம், அந்தப் புன்முறுவலுடன் அவருடைய முகத்திலும் ஆனந்தம் பெருக்கெடுப்பதை பார்த்தார் ஏழை; அந்தப் பரமானந்தத்தைத் தானும் பெற, அந்த ஏழை உறுதி கொண்டார். ஆற்றில் நீராடி மறுபடியும் சுவாமியிடம் வந்து அவரை வணங்கி, உபதேச ஞானம் என்று சொல்லக்கூடிய மிகவும் உயர்ந்ததான அந்த ஞான உபதேசத்தைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தார். ஞானிகள் ஒதுக்கியதை அடைய விரும்பும் நாம், அந்த ஞானிகள் ஏற்றுக் கொண்டதை அவர்களிடம் இருந்து அடைய முயற்சி செய்வோம்! வெல்வோம்! உயர்வோம்!

-V.R.சுந்தரி

Tags : Goswami ,Parisamanikal ,Vrindavan ,Gokulam ,
× RELATED இரண்டுக்கும் காரணம் இருக்கிறது!