×

லெபனான் விவகாரத்தில் ஆவேச பேச்சு; ‘உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது’- நெதன்யாகுவை கடுமையாக சாடிய டிரம்ப்

 

வாஷிங்டன்: லெபனான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக மிகக்கடுமையாக எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே பல ஆண்டுகளாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. கடந்த காலங்களில் ஈரான் விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் மீதான ஊழல் வழக்குகளின் போது, அவருக்கு ஆதரவாக டிரம்ப் செயல்பட்டு வந்தார்.

தற்போது லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இதுவரை லெபனான் நாட்டில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட டிரம்ப் எடுத்து வரும் வியூகங்களுக்கு இந்த போர் பெரும் தடையாக அமைந்துள்ளது. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போது, ‘உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, நான் மட்டும் இல்லையென்றால் நீ இந்நேரம் சிறையில் இருந்திருப்பாய், உன்னை காப்பாற்றுவதே நான்தான்’ என்று டிரம்ப் மிகவும் ஆவேசமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட் (லெபனான்) மீது குண்டு வீசினால் உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலை வெறுக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதையடுத்து பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தும் முடிவை இஸ்ரேல் வாபஸ் பெற்றுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், ‘பெய்ரூட் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்த வேண்டாம் என்று நெதன்யாகுவிடம் கேட்டுக் கொண்டேன், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்’ என்று கூறியுள்ளார்.

Tags : LEBANON ,TRUMP ,Washington ,US ,President Trump ,Israeli ,Netanyahu ,US President Trump ,Benjamin Netanyahu ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு