×

பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?

 

கோவை: கோவையில் கார் டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இவ்வழக்கில் பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பட்டு நூல்கார சந்து பகுதியை சேர்ந்தவர் பஷீர். இவரது மகன் அபுதாகிர் பாஷா(27). இவர், ஆக்டிங் டிரைவராக பணி செய்து வந்தார். தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் நடத்தி வந்தார். கடந்த 29ம் தேதி அபுதாகிர் பாஷா தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதற்குப் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் பாத்திமா, தனது மகனை பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என கூறி ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான அபுதாகிர் பாஷாவை தேடி வந்தனர். அப்போது சிரியன் சர்ச்ரோடு பகுதியில் சாக்கடையில் ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அது மாயமான அபுதாஹிர் பாஷா என்பது தெரிவந்தது. மேலும் அவரது வயிற்றில் கத்திக்குத்து காயம் இருந்துள்ளது.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபுதாகிர் பாஷாவை அழைத்துச்சென்று கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு உடலை எரித்து தப்பியோடிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அபுதாகிர் பாஷாவிற்கு திருமணம் ஆகி மனைவி பெங்களூரில் இருப்பதாகவும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்தது. இந்த நிலையில் அபுதாகிர் பாஷா பல்வேறு பெண்களுடன் பேசி வந்துள்ளதாகவும், அவருக்கு பல்வேறு நபர்கள் மிரட்டல் விடுத்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.

செல்போனில் அவரை யாரோ தொடர்ந்து மிரட்டியதால் அவர் கோபமாக பேசியுள்ளார் அதற்கு பிறகு அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் போலீசார் அவரது செல்போன் தொடர்புகளில் உள்ள நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அபுதாகிர் பாஷாவிற்கு காதலி ஒருவர் இருந்துள்ளதாக தெரிய வந்தது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Goa ,Govai R. S. ,Puram ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை