×

இலங்கை பெண் கார் ஏற்றி கொலை ஏன்? இடுப்பை பிடித்து கிள்ளி பாலியல் சீண்டல்: நண்பர் பரபரப்பு வாக்குமூலம்

 

 

சென்னை: கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இடுப்பைப் பிடித்து கிள்ளி தங்களோடு வருமாறு பாலியல் தொல்லை கொடுத்தனர் என கொலையான யான்சியின் நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், அனிச்சன்குப்பத்தில் ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் நகுலேஸ்வரன் என்பவரது மகள் யான்சி (18), பிளஸ் 2 முடித்துள்ளார். இவரது பள்ளி தோழி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதா (18). இவரது பக்கத்து ஊரை சேர்ந்தவர் பவுசியா (17). இவர்களில் தம்பிதா மூலம் ஏற்கனவே யான்சிக்கு பவுசியா அறிமுகமாகி உள்ளார். இவர், சென்னை ராமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பவுசியாவை பார்ப்பதற்கு, கடந்த 19ம் தேதி விழுப்புரத்தில் இருந்து யான்சி வந்துள்ளார். யான்சி மற்றும் அவரது தோழி இருவரும் கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு யான்சி மற்றும் சிறுமி, தம்பிதா உள்பட 6 பேர் கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள ‘‘கேட்வே எப்எல் -3’’ என்ற பிரபலமான ஓட்டலுக்கு சென்றுள்ளனர். இந்த ஓட்டல் பிரபல டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் தவெக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இங்கு டிஜே இசையுடன் கூடிய மதுபாரில் அன்று இரவு 11 மணிக்கு 6 இளம்பெண்களும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அங்கு அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகுரு (21), சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜோஷ்வா (19), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (19), சுமன் சக்தி வேல் உள்ளிட்ட 7 பேர் ஒன்றாக குடித்துள்ளனர். அப்போது சுமன் சக்திவேல், பாலகுரு குழுவினர் யாசினி மற்றும் தோழிகளிடம் உல்லாசமாக இருக்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளனர். உல்லாசத்திற்கு அழைத்த பாலகுரு மற்றும் அவரது தரப்பினரை இளம்பெண்கள் செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. பிறகு அங்கிருந்த பவுன்சர்கள் ஒரு வழியாக சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர். யான்சி, தீபிகா, பவுசியா, தம்பிதா மற்றும் 17 வயது சிறுமி இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு திருமங்கலம் சாலையில் வந்துள்ளனர்.

அப்போது பின்தொடர்ந்து வந்த சக்திவேல், பாலகுரு தரப்பினர் கார் மீது யான்சி தோழிகள் கற்கள் வீசி தாக்கி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாலகுரு தரப்பினர் யான்சி மற்றும் தீபிகா சென்ற ஸ்கூட்டரை அதிவேகமாக துரத்தி சென்று வேகமாக மோதி உள்ளனர். இதில் ஸ்கூட்டரை ஓட்டிய யான்சி மற்றும் தீபிகா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். கீழே விழுந்த யான்சி மீது மீண்டும் காரை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பினர். இதை பார்த்து பவுசியா உள்ளிட்ட இளம்பெண்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே 108 ஆம்புலன்ஸ் வந்து காயம் அடைந்த பவுசியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது யான்சியை காரை ஏற்றி கொன்றது உறுதியானது. இதையடுத்து சக்திவேல், பாலகுரு, ஜோஷ்வா, கிஷோர் குமார், விமல், கோமகன் சுந்தரம், ராகுல் ஆகிய 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு போலீசார் புதுச்சேரி மாநில போலீசார் உதவியுடன் பாலகுரு, ஜோஷ்வா, கிஷோர் குமார் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

சக்திவேல், விமல், கோமகன், ராகுல் ஆகிய நான்கு பேரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இருப்பினும் தலைமறைவாக உள்ள ஒருவரை மட்டும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், இளம் பெண் கொலை சம்பவம் தொடர்பாக அஸ்ரத் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல் வருமாறு: எனக்கு மது அருந்தும் பழக்கம் எதுவும் கிடையாது. அங்கு யான்சி, பவுசியா மது அருந்தி கொண்டிருந்தனர். இதில் பவுசியா ஒரு பக்கமாக அமைதியாக அமர்ந்திருக்க, யான்சி மேடையில் நடனமாடினார். அப்போது, ஒரு கும்பல் அவரிடம் தவறான முறையில் வம்பிழுக்க தொடங்கியது.

அவரது இடுப்பை பிடித்து கிள்ளியதுடன், தங்களோடு வருமாறும் வற்புறுத்தியுள்ளனர்.இதுகுறித்து யான்சி என்னிடம் வந்து கூறவே, நான் உடனடியாக நடன மேடைக்கு சென்று, அந்த கும்பலிடம் பெண்களை தொந்தரவு செய்யாமல் தள்ளி நின்று ஆடுமாறு கூறினேன். இதனால் கோபமடைந்த அந்த கும்பல், ‘‘எங்களை கேட்க நீ யார்?’’ என்று என்னிடம் சண்டைக்கு வந்து எனது முகத்தில் குத்தி தாக்கினர். உடனே பவுன்சர்கள் தலையிட்டு, எந்த பிரச்னையும் செய்ய வேண்டாம் என்று கூறி அனைவரையும் வெளியே அனுப்பினர்.

எங்களிடம் ஒரே ஒரு ஸ்கூட்டர் மட்டுமே இருந்ததால் யான்சி, பவுசியா உள்பட 4 பேர் புறப்பட்டோம். கோயம்பேடு மேம்பாலத்தை கடக்கும்போது சொகுசு காரில் வந்த கும்பல், எங்கள் வண்டி மீது மோதியது. இருமுறை எங்கள் ஸ்கூட்டி மீது மோதினர். நாங்கள் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தோம். இதில் யான்சி மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பவுசியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்கூட்டியை ஓட்டி வந்த மற்றொரு நண்பருக்கும் எனக்கும் காயம் ஏற்பட்டது. இவ்வாறு வீடியோவில் கூறியிருந்தார்.

பார் உரிமையாளரான தவெக நிர்வாகியை காப்பாற்றும் காவல்துறை
கோயம்பேடு பகுதியில் இளம்பெண் யான்சி கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது திட்டமிட்ட படுகொலை என்பதால் கோயம்பேடு போலீசார் சுமன் சக்திவேல் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியான சுமன் கச்திவேல் உள்பட 4 பேரை இன்னும் போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். அதேநேரம், இளம்பெண் கொலைக்கு முக்கிய காரணம் பாரில் நடந்த பிரச்னை தான், ஆனால் கோயம்பேடு போலீசார் ‘சென்னை கேட்வே’ பார் உரிமையாளர் மற்றும் பாரின் மேலாளர் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து விசாரித்த போது, ‘சென்னை கேட்வே’ பார் உரிமையாளர் பிரபல டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் பாலாஜி என்பது தெரிந்தது. இவர் தவெகவில் நிர்வாகி. அதேநேரம் தேர்தல் நேரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு பல கோடி செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாலாஜியை கோயம்பேடு பகுதியில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளரான தவெக எம்எல்ஏ ஒருவர் போலீசார் கைது ெசய்யாமல், உயர் காவல்துறை அதிகாரிகளிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி, குற்றம் நடக்க காரணமாக இருந்த பார் உரிமைத்தை தற்காலிகமாக மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அதிகாரிகள் சீல் வைத்து நேற்று முன்தினம் மூடினர்.

ஆனால் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை சட்டவிதிக்கு புறம்பாக மதுபாருக்குள் ஆண் நண்பர்களுடன் அனுமதித்தும், சிறுமிகள் மது அருந்தவும் அனுமதி அளித்த பார் உரிமையாளர் பாலாஜி மீது கோயம்பேடு போலீசார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் போதை பொருளை ஒழிக்கவும், பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் சிறப்பு படை தொடங்கவும் முதல் கையெழுத்து போட்ட முதல்வர் விஜய், தனது கட்சி நிர்வாகி நடத்தும் மதுபாரில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாருக்குள் அனுமதித்து, அவர்கள் மதுபானம் குடிக்க அனுமதித்தும் பாரிலேயே சிறுமி உள்பட 6 பெண்களை 7 பேர் ெகாண்ட கும்பல் பாலியல் தொந்தரவு செய்ய காரணமாக உள்ள பார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காதது முதல்வர் விஜய் மீது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Yancy ,Eelam ,Anichankuppam, Villupuram district… ,
× RELATED பைனான்சியர் கத்தியால் குத்தி எரித்து...