×

இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து மியான்மர் அதிபர் யு மின்னுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

 

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மியான்மர் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த பொது தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி வெற்றி பெற்றதால், மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவ ஆட்சி குழுவின் தலைவர் யு மின் ஆங் ஹ்லைங் மியான்மர் அதிபராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங் கடந்த 30ம் தேதி 5 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள் அடங்கிய குழுவினரும் இந்தியா வந்துள்ளனர்.

இந்திய பயணத்தில் முதலாவதாக பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மகாபோதி ஆலயம் சென்ற யு மின் ஆங் ஹ்லைங், புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் பிரார்த்தனை செய்தார். நேற்று முன்தினம்(மே 31) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் யு மின் ஆங் ஹ்லைங் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எல்லை கிளர்ச்சிகள், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் எல்லை தாண்டிய கடத்தல் சம்பவங்கள் உள்பட இந்தியா, மியான்மர் எல்லையில் நிலவும் முக்கிய பாதுகாப்பு சவால்கள் பற்றி இருவரும் விவாதித்தனர். இந்நிலையில் அவர் நேற்று டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வர்த்தகம், எரிசக்தி, முதலீடு மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தன் எக்ஸ் பதிவில், “மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங்குடனான பிரதமர் மோடியின் சந்திப்பு நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை ஆழப்படுத்துகிறது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக ஐதராபாத் மாளிகைக்கு வந்த மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங்கை பிரதமர் மோடி வாழ்த்தி, வரவேற்றார்” என தெரிவித்துள்ளார்.

Tags : PM Modi ,Myanmar ,President ,U Min Aung Hlaing ,New Delhi ,Modi ,India ,USDP ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...