சென்னை: தேமுதிகவை எடப்பாடி குறைத்து மதிப்பிட்டதால் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, ஐசியுவிற்கு சென்றுள்ளது. பதவி, பணம், சோபா செட், பெட்டிக்கோ ஆசைப்படாமல் கூட்டணிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் நாங்கள் என்று பிரேமலதா கூறினார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்பி, அவைத்தலைவர் இளங்கோவன், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க, குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனைகளை வழங்குவது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின்னர் பிரேமலதா அளித்த பேட்டி: பதவிக்கோ, பணத்திற்கோ, சோபா செட்டிற்கோ, பெட்டிக்கோ எதற்கும் ஆசைப்படாமல் பயணிக்கும் கூட்டணிக்கு விசுவாசமாக, உண்மையாக இருக்கிற கட்சி தேமுதிகதான். நான் நினைத்திருந்தால் விஜய்யை சந்தித்திருக்க மாட்டேனா.. அமைச்சர் பதவிக்காக எல்லாரும் ஓடுகிறார்கள். அமைச்சர் பதவி என்ன, ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை. ஆனால், இதுக்கு எல்லாம் ஆசைப்படும் கட்சி அல்ல தேமுதிக.
அதிமுகவில் உடன் நின்ற தேமுதிகவிற்கு மரியாதை இல்லை. தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களில் தேமுதிகவை மட்டும் விமர்சித்து பேசினார் எடப்பாடி. அப்போதுதான் எம்.பி.சீட்டுக்காக அதிமுக அளித்த, இபிஎஸ் கையெழுத்திட்ட கடிதத்தை காட்டினேன். அதிமுகவில் இபிஎஸ்-ஐ தவிர அனைவரும் தேமுதிக கூட்டணியில் இருக்கவேண்டும் என நினைத்தனர். ஆனால் அவர் குறைத்து மதிப்பிட்டார். ஆனால் இன்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, அதிமுக ஐசியுவிற்கு சென்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
* பதவி, பணம், சோபா செட், பெட்டிக்கோ ஆசைப்படாமல் கூட்டணிக்கு விசுவாசமாக இருப் பவர்கள் நாங்கள்.
