×

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.  தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி காலியானது.

இந்த ஒரு இடத்திற்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் குஜராத், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் 24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலும் ஜூன் 18ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுக்களை வரும் 8ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஜூன் 9ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. ஜூன் 11ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் ஆகும். போட்டியிருந்தால் ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். 17வது சட்டப்பேரவையில், தவெக 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான திமுக 59 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும், அதிமுக 43 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் தவெக 120 என்ற பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளது.

இதனால் மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் வென்ற கையோடு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியையும் தவெக கைப்பற்ற உள்ளது. இந்த பதவி தவெக முக்கிய நிர்வாகி ஒருவருக்கு வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக முதல் எம்பி என்ற அடையாளத்துடன் அவர் டெல்லி செல்வார். அவர் யார் என்பது தான் அரசியல் அரங்கில் கேள்வியாக எழுந்துள்ளது.

* அதிமுகவின் சி.வி.சண்முகம் மயிலம் பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார்.

* இந்த ஒரு இடத்திற்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

* மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.

Tags : Rajya Sabha ,Tamil Nadu ,Chennai ,Former minister ,C.V. Shanmugam ,AIADMK ,Tamil Nadu assembly elections ,Mayilam ,Villupuram ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து