×

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்

 

டெல்லி: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததை அடுத்து ஒரு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் நாளை முதல் ஜூன் 8ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும், ஜூன் 11ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் ஜூன் 18ம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மொத்தம் 24 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனுடன், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் அதே நாளில் நடைபெற உள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு பெறுவதால், அவர்களுக்கு மாற்றாக புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் எச்.டி. தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்னீத் சிங் உள்ளிட்ட 24 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் தலா நான்கு இடங்கள் காலியாக உள்ளன. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா மூன்று இடங்களுக்கும், ஜார்க்கண்டில் இரண்டு இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவை இடத்திற்கும் வாக்குப்பதிவு நடத்தப்படும்.

இதற்கிடையே தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த இடம் காலியாகியுள்ளது. அதேபோல், மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பொறுப்பேற்ற சுனேத்ரா பவார் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு ஒரு இடம் காலியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைமுறை விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் ஆரம்பமாகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 8-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வேட்புமனுக்களை பரிசீலனை செய்த பிறகு, அவற்றை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் ஜூன் 11-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் அதே நாளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்றும், விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த தேர்தல், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மற்றும் பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் முக்கியமான தேர்தலாகக் கருதப்படுகிறது.

Tags : Tamil Nadu ,Delhi ,C. ,V. ,Sanmugham ,M.A. ,Shanmugham ,
× RELATED சட்டம்-ஒழுங்கை சீரமைத்து மக்களின்...