×

எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்: திருப்பரங்குன்றம் கோயில் நடை சாத்தல் விவகாரத்தில் ஐகோர்ட் கருத்து

சென்னை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் மே 15ம் தேதி தரிசனத்துக்காக கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே நடை சாத்தப்பட்டது. அதேபோல, கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வி.பாலசுப்ரமணியம், கோயில் நடை சாத்தப்படுவதற்கு முன்பே அமைச்சர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டார்.

அதற்கு கண்காணிப்பு கேமரா ஆதாரம் உள்ளது. அவரால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. கோயில் நடை பிற்பகல் ஒரு மணிக்கு தான் அடைக்கப்படும். பிற்பகல் 12.50 மணிக்கு அமைச்சர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டார் என்று விளக்கம் அளித்தார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை. எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

Tags : God ,High Court ,Thiruparankundram ,Chennai ,Thiruparankundram Subramaniam Swamy Temple ,Minister ,Nirmal Kumar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து