கேங்டாக்: இமயமலைத் தொடரின் மடியில் அமைந்துள்ள “இயற்கையின் சொர்க்கம்” என்று குறிப்பிடப்படும் ஒரு சிறிய மாநிலமான சிக்கிம், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட ULLAS (Understanding of Lifelong Learning for All in Society) திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டமானது முறையான பள்ளிப்படிப்பை தவறவிட்ட 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்வியல் திறன்களை கற்று தருவதோடு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவுடன், டிஜிட்டல் மற்றும் நிதி சார்ந்த அறிவை பயிற்றுவிக்கும் ஒரு திட்டம் ஆகும். 2022-ஆம் ஆண்டு நவம்பர் 14 சிக்கிம் மாநிலத்தில் துவக்கப்பட்ட இந்த திட்டமானது, மாநிலத்தில் உள்ள 6 மாவட்டங்கள், 34 வட்டாரங்கள், கிராம பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் வார்டுகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் முதியவர்கள் மற்றும் எழுதப்படிக்க தெரியாதவர்கள் அதிகாரிகள் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் மூலம் எழுதப்படிக்க தெரிந்தவர்களாக மாற்றப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் கேங்டாக்கில் உள்ள மனன் கேந்திராவில் நடைபெற்ற சிக்கிம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் ” சிக்கிம் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது சிக்கிம் மாநிலத்தின் கல்வி வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.
99.82% எனும் மிகச்சிறந்த எழுத்தறிவு விகிதத்தை எட்டியதை தொடர்ந்து முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மிசோரம், கோவா, திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய, முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் எலைட் பட்டியலில் சிக்கிம் இப்போது இணைந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் மூன்றாவது மாநிலமாகவும், நாட்டில் முழுமையான எழுத்தறிவு பெற்ற ஐந்தாவது மாநிலமாகவும் இந்த சாதனையை சிக்கிம் எட்டியுள்ளது. மேலும் இந்தச் சாதனை மூலம், அனைவருக்கும் எழுத்தறிவு எனும் தேசிய இலக்குக்கான காலக்கெடுவை சிக்கிம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது முழுமையான எழுத்தறிவை எட்டிய நாட்டின் முதல் மாநிலம் மிசோரம் ஆகும்.
