டெல்லி: அதிகரித்து வரும் ரூபாய் நோட்டுகளின் தேவையை சமாளிக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டு வரும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் தீவிரமாக எடுத்து கொண்டு உள்ளது. பாட்னா மற்றும் மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கடந்த இரண்டு வாரியக் கூட்டங்களில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய வங்கி விரைவில் ஒரு முன்னோடித் திட்டத்தை அறிவிக்க கூடும். ஒருபக்கம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து கொண்டே வந்தாலும் கூட, நம் நாட்டில் காகித பணப்புழக்கம் 42.86 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
காகித ரூபாய் நோட்டுகளை பாதுகாப்புடன் அச்சிட கடந்த ஆண்டில் மட்டும், 5101.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. அதோடு கடந்த 2024-25 நிதியாண்டில் (FY25) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புழக்கத்திலிருந்து நீக்கி, அழித்த அழுக்கடைந்த மற்றும் சேதமடைந்த காகித நோட்டுகளின் எண்ணிக்கை 238 கோடி (23.8 பில்லியன்) பீஸ்கள் ஆகும்.முந்தைய ஆண்டுடன் (FY24 – 21.24 பில்லியன் நோட்டுகள்) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அழிக்கப்பட்ட நோட்டுகளின் எண்ணிக்கை 12.3% அதிகரித்துள்ளது. காகித ரூபாய் நோட்டுகளை பராமரிப்பதில் ஏற்படும் இந்த பெரும் சுமையே, பிளாஸ்டிக் (பாலிமர்) நோட்டுகளை நோக்கி ரிசர்வ் வங்கியை சிந்திக்க வைத்துள்ளது.
காகித ரூபாய் நோட்டுகளை விட, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அதிக ஆயுள் (2.5 மடங்கு கூடுதல் ஆயுள்) கொண்டவை மற்றும் குறைவான உற்பத்தி செலவு கொண்டது என்பதால் விரைவில் இதற்கான சோதனை திட்டம் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அன்றாடம் அதிக பயன்பாட்டில் இருக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்பு நோட்டுகள் மிக விரைவாகத் தேய்ந்துவிடுவதால், அவை முதலில் சோதனைக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதே போல பாலிமர் ரூபாய் நோட்டுகள் ‘பிளாஸ்டிக்’ என்று குறிப்பிடப்பட்டாலும், கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளைப் போல விறைப்பான தன்மை கொண்டவை அல்ல. இவை எடை குறைந்தவை, மடிக்கக்கூடியவை,மேலும் காகித ரூபாய் நோட்டுகளைக் கையாள்வது போலவே இவற்றையும் மிக எளிதாகக் கையாள முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
