சென்னை: மேற்காசியப் போர் காரணமாக தமிழ்நாட்டில் உரங்களின் விலைகள் 47% வரை உயர்த்தப்பட்டிருப்பதால், உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். உரங்களின் விலைகளை கட்டுப்படுத்த, விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான நீண்ட அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது, தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் குறுவை நெல் சாகுபடிக்கான ஏற்பாடுகளில் உழவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக காவிரியில் வரும் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், குறுவை சாகுபடி பரப்பு கணிசமாக குறையும் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.
மறுபக்கம் மேற்காசியப் போர் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொட்டாஷ் போன்ற உரங்களின் விலைகளும், மூலப் பொருள்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் யூரியா, காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலைகளும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
பொட்டாஷ் விலை மூட்டை ரூ.1,850-லிருந்து ரூ.2,250 ஆக உயர்ந்துள்ளது. இது 22% உயர்வு ஆகும். அதேபோல் பாக்டம்பாஸ் எனப்படும் காம்ப்ளெக்ஸ் உரத்தின் விலை ரூ.1,750-லிருந்து ரூ.2,150 ஆக, அதாவது 23% உயர்ந்துள்ளது. அம்மோனியம் சல்பேட் விலை ரூ.950-லிருந்து 47% உயர்ந்து ரூ.1,400 ஆகியுள்ளது. 17:17:17 காம்ப்ளெக்ஸ் விலை 16%, 10:26:26 காம்ப்ளெக்ஸ் விலை 42%, சூப்பர் பாஸ்பேட் விலை 33% அளவுக்கு உயர்ந்துள்ளன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில், அதாவது குறுவை பருவம் தீவிரம் அடையும் போது உரங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்பதுடன், அவற்றுக்கு பெரும் தட்டுப்பாடும் ஏற்படும். இதனால் உழவர்கள் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையும், ஒருவேளை அதிக விலைக்கு உரங்களை வாங்கி சாகுபடி செய்தால் விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலையும் உருவாகும். இதனால் கடுமையாகப் பாதிக்கப்படப்போவது அப்பாவி விவசாயிகள் மட்டுமே.
அதே போல நடப்பாண்டில் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.72, அதாவது 3 விழுக்காடும், கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.93, அதாவது 2.82 விழுக்காடும் மட்டுமே மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இன்னொருபக்கம் நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.4,500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க. அரசு, அதற்கேற்ற வகையில் ஊக்கத்தொகையை உயர்த்துவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் உழவர்கள் வாங்கியக் கடன் முழுமையாகவும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இப்போது கடும் நிபந்தனைகளை விதித்து உழவர்களின் பயிர்க்கடனில் ரூ.5000 முதல் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளார். இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு த.வெ.க. அரசு இழைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகமாகும்.
உர விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கு துரோகம் செய்வது நியாயமாகாது. இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து உரங்களுக்கு அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டு, அதே விலைக்கு உழவர்களுக்கு உர வகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. சர்வதேச சந்தையில் உர விலைகள் உயர்ந்தால், அதை மத்திய அரசே ஏற்றுக்கொண்டு மானியம் வழங்கியதால், உர விலை உயர்வு உழவர்களை எந்த வகையிலும் பாதிக்காமல் இருந்து வந்தது.
ஆனால், இப்போது யூரியாவுக்கு மட்டுமே அத்தகைய நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள உர வகைகளுக்கு குறிப்பிட்ட தொகையை மட்டுமே மானியமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. அதனால், உர விலைகள் உயரும் போது, அது உழவர்களை நேரடியாக பாதிக்கிறது. இந்த நிலையை மாற்றி, மேற்காசியப் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த விலைகளிலேயே உரங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் உர நிறுவனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும். மாநில அரசும் அதன் பங்குக்கு நெல் கொள்முதல் விலையை ரூ.3500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலையை ரூ.4500 ஆகவும் உயர்த்தி வழங்குவதுடன், காய்கறிகள், பழங்கள், மஞ்சள், கிழங்குகள் ஆகியவற்றுக்கு கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார்.
