×

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகளை ஒதுக்குவதில் சாதிய பாகுபாடு: சைதாப்பேட்டை தவெக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

 

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், ஒரு தரப்பினருக்கு, குலுக்கல் இன்றி வீடுகள் ஒதுக்க சைதாப்பேட்டை தவெக எம்எல்ஏ வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை சுப்புபிள்ளை தோட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 80 கோடி ரூபாயில், நான்கு பிளாக்குகளில், ஆறு மாடிகள் கொண்ட, 426 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் குடியிருப்பு திறக்கப்பட்டது. இவற்றில், ஏற்கனவே இருந்த பழைய குடியிருப்பில் வசித்தவர்களுக்கு தேர்தலுக்கு முன் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில், ஒரு பிரிவைச் சேர்ந்த 36 குடும்பத்தினருக்கு, குலுக்கல் முறை இல்லாமல் ஒரே பிளாக்கில் வீடுகள் ஒதுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சைதாப்பேட்டை தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., அருள் பிரகாசம் வலியுறுத்தியதால், அதிகாரிகள் குலுக்கல் இல்லாமல் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மற்றொரு பிரிவினர், குலுக்கல் முறையில் தான் வீடுகளை ஒதுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் பொதுச்செயலாளர் டேவிட் மகிமைதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற அரசு அமைப்புகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும்போது, அதில் சாதி பாரபட்சம் காட்டுவது என்பது முற்றிலும் சட்டவிரோதமானது, சமூக நீதிக்கு எதிரானது மற்றும் மனிதநேயமற்ற செயலாகும். ​

அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டிய ஒரு மக்கள் நலத் திட்டத்தில் சாதி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ​இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இது முற்றிலும் எதிரானது. ​சாதி அடிப்படையில் வீடுகளை ஒதுக்குவது அல்லது குறிப்பிட்ட சாதியினருக்கு முன்னுரிமை மறுப்பது இந்த மிக முக்கியமான அடிப்படை உரிமையை நேரடியாக மீறும் செயலாகும். இது நகர்ப்புறங்களில் ”புதிய சேரிகளை” உருவாக்க வழிவகுக்கும். சாதியப் பாகுபாடுகளை ஒழித்து, அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்ற நவீன நகரமயமாக்கலின் நோக்கத்தையே இது பாழாக்கிவிடும். ​

அரசு திட்டங்களில் சாதித் தலைகீடிருந்தால், அது மக்களிடையே தேவையற்ற பிரிவினையையும், வெறுப்புணர்வையும், வன்முறையையும் தூண்டக்கூடும். அரசு இயந்திரம் இந்த ஒதுக்கீட்டுச் செயல்முறையை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி, சாதியப் பாகுபாடுகள் ஏதேனும் புகாராக வந்தால் அதன் மீது மிகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் உண்மையான சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Urban Habitat Development Board ,Saithapettai ,Takeka ,MLA ,Chennai ,Saithapet ,Chaithappettai ,Suppupillai Dhatta ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து