லக்னோ: உத்தரபிரதேச மின்வெட்டு பிரச்னை தொடர்பாக “உத்தரபிரதேசத்தில் குஜராத் மாடல் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டது” என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு வாட்டி எடுக்கும் கடும் வெப்ப அலையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வரும் நிலையில் பகலிலும் மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்வெட்டு பிரச்னை குறித்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசை முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தன் எக்ஸ் பதிவில், “உத்தரபிரதேசத்தில் குஜராத் மாடல டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டது.
வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட ஸ்மார்ட் மின் மீட்டர்கள் மின்சாரமின்றி இயங்குவதால், மக்கள் பாஜ தலைவர்களின் பின்னால் ஓடி கொண்டுள்ளனர். பெரிய தலைவர்களே தோல்வி அடைந்து விட்டனர். எனவே, அவர்களின் சீடர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? ஏதாவது பிரச்னை ஏற்படும் போதெல்லாம் பாஜ தலைவர்கள் சரணடைய கைகளை உயர்த்துவது ஏன்? என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். மின்வெட்டு நெருக்கடிகளுக்கு பாஜவின் பதில் என்ன? என்றும் மக்கள் கேட்கின்றனர்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
