×

அதிமுக மாஜி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் தவெகவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டார். 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர். திருச்சி மாவட்ட செயலாளராகவும், கட்சியின் அமைப்புச் செயலாளராகவும், திருச்சி மாவட்ட அமைச்சராகவும் அதிமுகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அதிமுகவில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் என இரு அணிகளாகப் பிரிந்திருந்த உட்கட்சிப் பிரச்னையின் போது, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அவ்வாறு மீண்டும் இணைந்த பிறகு அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும், கட்சியில் அமைப்புச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. அதிமுகவில் தற்போது தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய உட்கட்சி பிரச்னைகள் மற்றும் அண்மையில் நடந்த தேர்தலில் அக்கட்சி சந்தித்த தோல்வி ஆகியவற்றின் அடிப்படையிலேயே, அவர் தன்னை கட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டு தவெகவில் இணைந்துள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் இவரது மகனும் தவெகவில் இணைந்தார். ஏற்கனவே அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான செம்மலை, தனபால் போன்றோர் தங்களை கட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டு வரும் தற்போதைய நிலையில், முன்னாள் அமைச்சரான இவர் மாற்று கட்சிக்குச் சென்றிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Tags : Former ,AIADMK ,Minister ,Vellamandi Natarajan ,Thavega ,Chennai ,Trichy ,2016 elections ,Jayalalithaa ,Edappadi Palaniswami ,Trichy district… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து