×

டாஸ்மாக் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

 

சேலம், மே 28: சேலம் மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ரூ.8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்களுக்கு அருகில் இருந்த 717 கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே 23 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை காலமுறை ஊதியம் வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலி மதுபாட்டில் திரும்பபெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தாமல் தனியார் முகமை மூலம் செயல்படுத்த வேண்டும்.

மதுபான கடையில் உடைகின்ற பாட்டில்களுக்கு இழப்பீட்டு தொகையை நிர்வாகமே வழங்க வேண்டும். மாதாந்திர விற்பனை தொகையில் 2 சதவீதம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும். மதுபான கிடங்கிலிருந்து கடைகளுக்கு கொண்டு வரும் மதுபான பெட்டிகளை போக்குவரத்து ஒப்பந்த ஊழியர்கள் கடையின் உள்ளே இறக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 174 டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அடுத்த சந்தியூரில் உள்ள டாஸ்மாக் குடோன் முன், டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று 2வது நாளாக, கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 12 மணிக்கு கடை திறக்கப்படும் என காத்திருந்த குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர். பலகடைகள் முன் குடிமகன்கள் ஆவேசத்துடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களிடம் புலம்பியபடி திரும்பிச் சென்றனர். சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் தினமும் சராசரியாக ரூ.4 கோடி வரை விற்பனை நடைபெறும்.

தொடர்ந்து 2 நாட்களாக கடைகள் மூடப்பட்டுள்ளதால், ரூ.8 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் சந்தியூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் பல இடங்களில் மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூடியதால் மது அருந்துவோர் மனமகிழ் மன்றம், தனியார் பாருக்கு படையெடுத்தனர். அங்கு மதுபானங்களின் விற்பனை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘‘12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக சேலம் மாவட்டத்தில் 177 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த கடைகளில் மேற்பார்வையாளர், விற்பனையாளர் என 700 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. டாஸ்மாக் கடைகள் மூடியதால் கடந்த இரு நாட்களாக மனமகிழ் மன்றத்திற்கும், தனியார் பாருக்கும் மது அருந்துவோர் படையெடுத்துள்ளனர். அங்கு டாஸ்மாக் கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குவார்ட்டர் பாட்டில் அதிக விலையில் விற்கப்படுகிறது’’ என்றனர்.

 

Tags : Tasmac ,Salem ,Tasmak ,Salem district ,Tamil Nadu ,
× RELATED சிறப்பு பஸ்கள் மூலம் 60 ஆயிரம் பேர் பயணம்