×

அரசு, உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை

 

சேலம், மே 28: சேலம் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளியில் பயின்று 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் வழங்கி அவர்களை உயர்கல்வியை நோக்கிய சரியான பாதையில் வழிநடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘‘கல்லூரி கனவு’’ நிகழ்ச்சி 4 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘‘கல்லூரி கனவு’’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன, முன்னேறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவ, மாணவிகள் தங்களது திறன்களை எவ்வாறு மென்மேலும் வளர்த்துக்கொள்ளலாம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை துறை சார்ந்த வல்லுநர்கள் எடுத்துரைக்கின்றனர்.

மாணவர்களின் கல்லூரி விருப்பத்தேர்வுகள் குறித்து கேட்டறியப்பட்டு, அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது. இதேபோல், அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், அரசு கல்லூரிகளில் சேர்வதால் கிடைக்கும் நன்மைகள், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்தும், படிக்கும் போது வருமானம் ஈட்டக்கூடிய படிப்புகள், கல்வி உதவித்தொகை சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் விளக்கங்களையும் வழங்குகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த 3 நாட்களில் தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க உள்ள மாணவ, மாணவிகள் என ஒவ்வொரு நாளும் 200 பேர் பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ளது. மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகளும், வழிகாட்டுதல் கையேடுகளும் வழங்கப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 100% உயர்கல்விச் சேர்க்கை என்ற இலக்கை அடைவதற்கான கல்வி கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண்.4ல் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்தல் சார்ந்தும், பாடப்பிரிவுகள், கல்லூரிகளை தேர்வு செய்தல் தொடர்பாகவும், கல்வி உதவித்தொகை சார்ந்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நேரிலோ அல்லது 0427-2452202 மற்றும் 97888 58931 ஆகிய எண்களிலோ தொடர்பு கொண்டு உயர்கல்வி சார்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை பெறலாம். இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் தங்கள் அருகில் உள்ள பிற மாணவ, மாணவிகளுக்கும் அதனை பகிர வேண்டும். இதேபோன்று ஆசிரியர்கள் தமது பள்ளியில் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர் கல்வியில் சேர்வதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷாலினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாரதி, வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Salem ,Tamil Nadu ,
× RELATED சிறப்பு பஸ்கள் மூலம் 60 ஆயிரம் பேர் பயணம்