×

சிறப்பு பஸ்கள் மூலம் 60 ஆயிரம் பேர் பயணம்

 

சேலம், மே 28: ஏற்காடு கோடை விழாவையொட்டி இயக்கப்படும் சிறப்பு பஸ் மூலம் இதுவரை 60 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்காடு உள்ளது. ஏற்காடு மலைப்பாதை 20 அழகிய கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. மலைப்பாதையில் ஆங்காங்கே வியூ பாய்ண்ட் உள்ளது. சுற்றுலா வரும் பயணிகள் இந்த வியூ பாய்ண்ட் பகுதியில் நின்று போட்ேடா எடுத்து, மலைப்பாதைகளின் அழகை ரசித்து செல்கின்றனர். ஏற்காட்டில் படகு இல்லம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, சேர்வராயன் கோயில், லேடீஸ் சீட், டெலஸ்கோப் பாய்ண்ட், பக்கோடா பாய்ண்ட், ஏரி பூங்கா உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. தனியார் நிறுவனங்கள் சார்பில் பொழுதுபோக்கு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டு ஏற்காட்டில் 49வது கோடை விழா கடந்த 22ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இவ்விழாவையொட்டி, தினசரி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 6 நாட்கள் இயக்கப்பட்ட வழக்கமான பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ் மூலம் இதுவரை 60 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்னும் நான்கு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் கூடுதலாக 30 ஆயிரம் பேர் பயணம் செய்ய வாய்ப்புள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேக்கேஜ் பஸ்சுக்கு அமோக வரவேற்பு: கோடை சீசனையொட்டி ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும் வகையில், சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் பேக்கேஜ் பஸ் ஒன்று கடந்த 7ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேக்கேஜ் பஸ் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான கரடியூர் காட்சிமுனை, சேர்வராயன் கோயில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய இடங்களை கண்டுகளித்து மீண்டும் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இரவு 7 மணிக்கு பேக்கேஜ் நிறைவு செய்யும் வகையில் இயக்கப்படுகிறது.

இதற்கான கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.300, அரைக்கட்டணம் ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேக்கேஜ் பயணத்திற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் வழியாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜ் பஸ், சுற்றுலா பயணிகள் இடையே அமோக வரவேற்ைப பெற்றுள்ளது. பேக்கேஜ் பஸ்சில் இடம் கிடைக்காதவர்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே கூடுதலாக பேக்கேஜ் பஸ் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags : Salem ,Yercaud Summer Festival ,Yercaud ,Salem New Bus Stand ,Yercaud Mountain Path… ,
× RELATED டாஸ்மாக் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்