×

பினராயி விஜயன் வீட்டில் ஈடி ரெய்டு; பாஜ அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம்: போராட்டம் நடத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் அழைப்பு

 

சென்னை: பினராயி விஜயன் இல்லங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது ஒன்றிய பாஜ அரசின் பழிவாங்கும் இழி செயல் என்றும் அதற்கு கண்டனம் தெரிவித்தோடு மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதற்கு தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் திருவனத்தபுரம் வாடகை வீட்டிலும், கண்ணூரில் உள்ள சொந்த வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டுகளை மேற்கொண்டுள்ளது. அரசியல் நோக்கத்துடன் கூடிய இந்த ரெய்டுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவை பாசிசத்தை நோக்கித் தள்ளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் ஒன்றிய பாஜ அரசு, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமானவரித்துறை, நீதி மன்றங்கள் போன்றவற்றை தனது அரசியல் நோக்கங்களுடன் கூடிய தனது கட்டளைகளுக்கு அடிபணியும் அமைப்புகளாக மாற்றியுள்ளது. அந்த அமைப்புகளை எதிர்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நோக்குடன், மிரட்டி, உருட்டி பணியவைக்கும் நோக்குடன் ஒன்றிய பாஜ அரசு பயன்படுத்துகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: கேரள முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது ஒன்றிய பாஜ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அமைப்புகளை பயன்படுத்தும் பாஜகவின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் இழிசெயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜ அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களை டெல்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் உடனடியாக கண்டன இயக்கங்களை நடத்த கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : ED ,Pinarayi Vijayan ,BJP government ,Communist ,Chennai ,Enforcement Directorate ,Kerala ,Chief Minister ,Pinarayi… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...