சென்னை: வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று திடீரென தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். மறு நிமிடமே அவர்கள் தவெகவில் தலைமைச் செயலகத்தில் வைத்தே இணைந்து உறுப்பினர் கார்டையும் பெற்றனர். இதே போல மேலும் 7 எம்எல்ஏக்களுடன் தவெக தரப்பினர் பேரம் பேசி வருவதாகவும், அவர்களும் ஓரிரு நாளில் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால், எஸ்.பி.வேலுமணி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. 118 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மை இல்லாத சூழலில், த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், திடீரென கூட்டணியை முறித்து கொண்டு தவெகவிற்கு ஆதரவு அளித்தது. தொடர்ந்து தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்தது.
இதற்கிடையில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தவெகவின் பலம் 107 ஆனது. மேலும் காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலா 2 எம்எல்ஏக்கள் என தவெகவுக்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 120ஐ தொட்டது. இதையடுத்து தவெக ஆட்சியமைத்து விஜய் முதல்வராகியுள்ளார். சட்டசபையில் தவெக பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, அக்கட்சிக்கு ஆதரவாக அதிமுகவின் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 25 பேர் செயல்பட்டனர். அமமுக எம்எல்ஏ ஒருவரும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதே நேரத்தில் அதிமுகவில் தாங்கள் தான் பெரும்பான்மை என்றும், தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது. எடப்பாடி தரப்பும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனு அளித்தனர். அதுமட்டுமல்லாமல் ஆளுநரை சந்தித்து 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இவ்வாறு இரண்டு அணியினரும் மாறி மாறி சபாநாயகரிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணியின் எம்எல்ஏக்களுக்கு 7 அமைச்சர் பதவி, 12 வாரிய தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் விஜய் முதலில் முன் வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரும் கைவிரித்து விட்டார். ஒரு கட்டத்தில் வேலுமணி போன் செய்தபோது, போனை கூட எடுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த ஆதவ் அர்ஜுனா, விஷ்ணு ரெட்டி ஆகியோரும் போனை எடுக்கவில்லை.
அதேநேரத்தில், வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரை தனியாக சந்தித்து 20 சி கொடுப்பதாகவும், மீண்டும் சீட், வெற்றி பெற்றவுடன் வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கு 10 எம்எல்ஏக்கள் வரை சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களான அவர்கள் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.
ராஜினாமா கடிதத்தை அளித்த கையோடு, மூவரும் தலைமை செயலகத்தில் உள்ள பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தில் அவரது முன்னிலையில் தவெகவில் இணைத்துக் கொண்டனர். தவெகவில் இணைந்த அவர்களுக்கு உடனடியாக புகைப்படத்துடன் கூடிய தவெக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றனர். தொடர்ந்து சுமார் 5 நிமிடம் அவர்களிடம் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், எம்எல்ஏக்களை தலைமைச் செயலகத்தில் வைத்து சேர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல ஓரிரு நாளில் அடுத்தடுத்து 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று, வெறும் 21 நாட்களில் ராஜினாமா செய்துள்ள மூவரும் மற்றொரு கட்சியில் உடனே இணைந்துள்ளது எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி தரப்பு, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் முதல்வர் விஜய் எம்எல்ஏக்களை இழுக்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளது ஏன் என்பது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று வந்தவர்கள். அவர்கள் இறுதி வரை கூட்டணியில் தொடர்வார்களா என்பது கேள்விக்குறி தான்.
எந்த நேரத்திலும் அவர்கள் காலை வாரி விட வாய்ப்புள்ளது. 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கும், ராகுல்காந்தியை காங்கிரசே பிரதமர் வேட்பாளராக அறிவிக்காதநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின்தான், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கும் நிலையில், திமுகவிடம் சொல்லாமல், அந்தர் பல்டி அடித்து கூட்டணி அரசில் சேர்ந்திருப்பவர்கள், நாளை நம்மையும் அப்படியே அம்போவென விட்டுச் செல்லமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது என்று தனது நெருங்கிய சகாக்களிடம் விஜய் கூறியுள்ளார். இப்படிப்பட்டவர்களை நம்பியிருந்தால் ஆட்சியை இழக்க தான் செய்ய வேண்டும். எனவே, அவர்களின் ஆதரவை தாண்டி மேலும் எம்எல்ஏக்கள் பலம் வேண்டும்.
அதற்கு அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு விஜய் வந்துள்ளார். இதனால் எம்எல்ஏக்களை இழுக்க குதிரை பேரம், தவெகவிற்கு வந்தால் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆசைவார்த்தை காட்டப்பட்டது. 20 சி வரை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெற்றி பெற்றவுடன் வாரிய தலைவர் பதவியும் வழங்கப்படும் என்ற ஆசைவார்த்தையில் தான் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரும் ராஜினாமா செய்து விட்டு தவெகவிற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அவர்கள் அந்த தொகுதியில் தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். அதிமுகவில் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அதிமுகவின் எம்எல்ஏக்களின் பலம் 44 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 230 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளார். தற்போது 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் 4 தொகுதிகள் காலியாகியுள்ளது. ஒரு எம்எல்ஏ தொகுதி காலியானால் 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அதன்படி தொகுதிகள் காலியானதாக முதலில் அறிவிக்கப்படும். அதன் பிறகு காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

