- மெகாதத்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- மாநில மாநில செயலாளர்
- மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி, பி.
- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றம்
- மெகாடத்து அணை
- சண்முகம்
சென்னை: மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவும் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு, மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அனுமதி தொடர்பான கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப் பெறவும் உத்தரவிட வேண்டும் என்றும், கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதிக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 2018 நவம்பர் 30 ஆம் தேதி மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, கடந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி கூறிய தீர்ப்பில், மேகேதாட்டு அணை திட்ட விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க மட்டுமே கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதித்துள்ளது என்றும், தமிழ்நாடு அரசின் ஆட்சேபணையையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் கருத்துகளையும் பதிவு செய்த பிறகே இந்த அனுமதி தரப்பட்டுள்ளது என்றும், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்தால், அத்தகைய நிலையில் வழக்கு தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சட்டப்படியான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கலாம் என்றும், இதன் அடிப்படையில் தமிழ்நாட்டு அரசின் மனுக்கள் உரிய நேரத்துக்கு முன்பே தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டு தமிழ்நாட்டு அரசின் மனுக்களை முடித்து வைத்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, மறு ஆய்வு மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது; உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் அமைப்பாகவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உள்ளது; அதற்கு மேல் வேறு அதிகாரம் இல்லை. ஆனால், இந்த விவகாரத்தில் ஆணையத்தை முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதித்த உத்தரவில் பிழை உள்ளது என்று மறு ஆய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 15 அன்று விசாரித்தது. இம்மனு மீது உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பில், மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும், மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து கடந்த நவம்பர் 13ஆம் தேதியிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டியதில்லை எனவும் கூறி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு பாதகமானது ஆகும். காவிரி தொடர்பான உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதி தீர்ப்புக்கும் விரோதமானதாகும். எனவே, காவிரி டெல்டா விவசாயத்தையும், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதுசம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
