×

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

பகுதி 4

திருவண்ணாமலை

கடலில் தோன்றிய ஆலகால விடத்தை நுகர்ந்த சிவபெருமான் பஞ்ச பூதங்களிலும் உறையும் பெருமானாகத் தோன்றியதை இரட்டைப் புலவர்கள் பின்வருமாறு பாடுகிறார்கள்.

“கடல் விடம் நுகர்ந்த காசினி லிங்கம்
காஞ்சிமா நகருறை லிங்கம்;
காவிரி வடபால் வரு திரு ஆனைக்
காவினில் அப்பு லிங்கமதாம்;
வடதிசை அண்ணாமலையினில் லிங்கம்
வன்னியின் வடிவு; காளத்தி
வாயு லிங்கமதாம்; சிதம்பர லிங்கம்
மாசில் ஆகாய லிங்கமதாம். [தில்லைக் கலம்பகம்]

காசினி தலமாகிய காஞ்சி, அப்பு தலமாகிய திருவானைக்கா இவற்றைத் தொடர்ந்து, நாம் காணவிருப்பது, நினைத்தாலே முக்தி தரும் அக்னி தலமாகிய திருவண்ணாமலை. [அருணாசலம் என்றும் அறியப்படுகிறது]. பதினெண் புராணங்களுள் ஒன்றாகிய  சிவ மஹாபுராணத்தில் முதன்முதலாக ஜோதிர் லிங்கம் தோன்றிய புராணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரம்மன், திருமால் இவர்களின் அகந்தையை அடக்க, சிவனார் அடிமுடி தெரியாதபடி ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாக ஓங்கி நின்றார். “கனல் மால் வரை”, “தூணோடிச் சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம்”, “அழலோங்கிய ஓங்கல்”, “சோதிக்கிரி” என்பன திருப்புகழில் வரும் குறிப்புகள்.பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலம் என்று போற்றப்படும் திருவண்ணாமலை, திருப்புகழ் அடியார்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசித்து வர வேண்டிய திருத்தலமாகும்.

இத்தலத்தை அவதாரத் தலமாகக் கொண்ட அருணகிரி நாதர், இங்கு இளம் வயதிலேயே, முருகனால் ஆட்கொள்ளப்பட்டு 79 திருப்புகழ்ப் பாடல்களை இத்தலத்திற்கெனப் பாடியருளியுள்ளார். இவரது இயற்பெயர் அருணகிரி. “நாதத்தை உணர்ந்து, நாதத்தைக் கடந்த, நவநாதர்களினும் சிறந்தவராதலின், முருகவேள், தமது திருவாக்கால், ‘நாதா’ என்ற சிறந்த பட்டத்தைச் சேர்த்து, ‘அருணகிரிநாதா’ என்று அவரை அழைத்தருளினார்” என்பது வாரியார் சுவாமிகளின் குறிப்பு.

குடந்தையில் மகாமகக் குளத்தின் வடகரையிலே மிகத் தொன்மையும் ஒப்பற்ற தன்மையும் உடையதாய் விளங்கும் வீர சைவ மடத்தில், “அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி” என்று பாடியுள்ளார். பாதாளங்கள் ஏழையும் கடந்து கீழே சென்ற சிவனாரது திருவடிகளைத் திருமால் கண்டறிய முடியவில்லை. அண்டங்களின் மேல் முகடுகளைக் கடந்து சென்ற திருமுடியைப் பிரம்மாவினால் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.

“திருமுடி அடி பார்த்திடும் என இருவர்க்கு
அடி தலை தெரியாப்படி நிண அருணச்
சிவசுடர் சிகி நாட்டவன்” [சிகி நாட்டவன் – அக்னிக் கண்ணன்]
– என்கிறது திருவருணைத் திருப்புகழ்.

பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் லிங்கோத்பவராகக் காட்சி கொடுத்தருளினார் சிவபெருமான். அக்னி குளிர்ந்து சிவந்த மலையாக மாறியது. அருணம் – சிவப்பு; எனவே அருணாசலம் என்று பெயர்பெற்றது. மலையே சிவம்; சிவமே மலை. இறைவன் அருணாசலேஸ்வரர் என்று பெயர்பெற்றார். யாவராலும் அண்ண முடியாத மலை ஆகையினால் ‘அண்ணாமலை’ என்றும் பெயர் பெற்றது; இறைவன் அண்ணாமலையார் என்றும் அழைக்கப்பட்டார்.திருவண்ணாமலை பற்றிய அழகிய திருப்புகழ் ஒன்றைப் பார்ப்போம்.

“செயசெய அருணாத்திரி சிவயநமச்
செயசெய அருணாத்திரி மசிவயநச்
செயசெய அருணாத்திரி நமசிவயத் திருமூலா
செயசெய அருணாத்திரி யநமசிவச்
செயசெய அருணாத்திரி வயநமசிச்
செயசெய அருணாத்திரி சிவயநமஸ்த்(து) எனமாறி
செயசெய அருணாத்திரி தனின் விழிவைத்(து)
அரகர சரணாத்திரி என உருகிச்
செயசெய குருபாக்கியம் என மருவிச் சுடர்தாளைச்
சிவசிவ சரணாத்திரி செய செயெனச்
சரண்மிசை தொழுதேத்திய சுவை பெருகத்
திருவடி சிவவாக்கியகடல் அமுதைக் குடியேனோ”

இப்பாடலில், அருணாத்திரி என்றும் சரணாத்திரி என்றும் மொத்தம் 12 முறைகள் வருகின்ற அழகு தனி தான்.

[அத்திரி – மலை; அருணாத்திரி – சிவந்த மலை; சரணாத்திரி – அடைக்கலஸ்தானம் (அ) திருவடி மலை]
சிவயநம, மசிவயந, நமசிவய, யநமசிவ, வயநமசி, சிவயநமஸ்து என்று இது போன்று மாறிமாறிச் செபிக்கும் முறையைத் திருமூலரும் திருமந்திரத்தில் பின்வருமாறு குறிக்கின்றார்.

“ஆயும் சிவாய நம மசிவாயந
வாயு நமசிவா யய நம சிவாயந
வாயுமே வாய நமசியெனு மந்திர
மாயுஞ் சிகாரம் தொட்டந்தத் தடைவிலே”
– என்கிறார்.

நினைத்தால் முக்தி அளிக்கும் பஞ்சாட்சரம் இங்கு ஆறு முறை வருவதால், இது நித்திய பாராயணத்திற்குரியது என்பர் ஆன்றோர்.

முருகனின் நடன தரிசனம் தனக்குக் கிட்டிய அருமையையும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

“செயசெய சரணாத்திரி எனும் அடியெற்கு
இருவினை பொடியாக்கிய சுடர் வெளியில்
‘திருநடம் இது பார்த்திடும்’ என மகிழ் பொற் குருநாதா”
– என்று கூறி மகிழ்கிறார்.

திருவண்ணாமலைக் கோயில் கோபுரங்கள் பற்றியும் அருணகிரியார் பல இடங்களில் குறிப்பிடுகிறார். கிழக்குத் திசையிலுள்ள ராஜ கோபுரம் 11 நிலைகள் கொண்டது. [உயரம் 217 அடி]. வடக்கிலுள்ளது அம்மணி அம்மாள் கோபுரம். தெற்கில் திருமஞ்சன கோபுரம். மேற்கில் பேய்க் கோபுரம். [பேய் பிசாசுகளுக்கும் இந்த கோபுரத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மேற்குக் கோபுரம் என்பதை ‘மேக் கோபுரம்’ என்று சுருக்கிய பின் அது மருவி ‘பே(ய்)க் கோபுரம்’ என்றாகிவிட்டது]. கோயிலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நின்று பார்த்தால் அனைத்துக் கோபுரங்களையும் (9) ஒரு சேரத் தரிசிக்கலாம்.

கோபுரத்து இளையனார் எனப்படும் முருகனை, “அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபாலமர்ந்த அறுமுகப் பெருமாளே!” என்று விளிக்கிறார். இவரே அருணகிரியாரை ஆட்கொண்ட மூர்த்தி. இவரையே கந்தர் அலங்காரத்தில் “அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன்” என்கிறார். “அருணையில் கோபுரத்து உறைவோனே” என்று ஆறு பாக்களில் பாடுகிறார். கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிர்விடத் துணிந்த அருணகிரியாரைத் தடுத்தாட்கொண்டு, “முத்து” என்று அடி எடுத்துக் கொடுத்து, தன் புகழ் பாட வைத்தான் முருகன். திருவேளைக்காரன் வகுப்பில், “ஆடக விசித்ர கன கோபுர முகப்பில் அருணாபுரியில் நிற்கும் அடையாளக் காரனும்” என்று பாடியுள்ளார்.

[பொன்னால் செய்யப்பட்டதும், அற்புதமான அழகுடையதும், பெருமை மிக்கதுமான கோபுரவாயிலில், திருவண்ணாமலையில் விளங்கும் என்னுடைய பிரத்யக்ஷ மூர்த்தியும் (குறத்தி திருவேளைக்காரனே). தான் உலக வாழ்க்கையில் சலிப்புற்று, அன்று வல்லாள மகாராஜனின் கோபுரத்திலிருந்து வீழ்ந்த போது, தன்னைக் காத்து, தனக்கு உபதேசம் செய்தருளிய மூர்த்தியும் இவன்தான் என்று அடையாளம் காட்டுகிறார்].

“பழவினைத் துயர் அறுத்து எனை வெளிப்பட உணர்த்தி அருளி துக்க சுக பேதமற வாழ்வித்த கந்த சுவாமி” என்கிறார் மயில் விருத்தத்தில்.

“சோதி அனலா உதித்த சோணகிரி மாமலைக்குள்
சோபை வட கோபுரத்தில் உறைவோனே”
என்கிறார் திருப்புகழில்.
“இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மாநகருக்குள்
இனிய குண கோபுரத்தில் உறைவோனே”
[அரி – பாம்பு/குரங்கு, குண – கிழக்கு]

“வாண்மலை அருணையில் அறவும் உயர்ந்த கோபுரமதில் உறை குமர!”
“ஆகமப் பத்தரும், ஆரண சுத்தரும், உற்று ஆதரிக்கைக்கு
அருணைத் துப்பு மதில் சூழும்
ஆடகச் சித்ர மணிக் கோபுரத்து உத்தர திக்காக
வெற்றிக் கலபக் கற்கி அமர்வோனே”

[ஆகமங்களை ஓதி உணர்ந்த பக்தர்களும், வேதங்களைப் பயின்ற தூயவர்களும் ஒன்று சேர்ந்து விரும்பிப் பணி செய்ய, திருவண்ணாமலையில் பொன்மயமான, விசித்ர அழகிய கோபுரத்தின் வடக்குத் திக்கில் ஜெயம் விளங்கும் மயில் மீது அமர்ந்தவனே!]

“திரு உலாவு சொணேசர் அணாமலை
முகில் உலாவு விமான நவோநிலை
சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே”
“அருணை நகர் கோபுர விருப்பனே போற்றி” என்கிறார் குடந்தை பெரிய மடத்தில்.இவ்வாறாக, கோபுரங்கள் மீது முருகனைத் தரிசித்த அருணகிரியார், அருணை வீதிகளிலும் அவனைக் கண்டு மகிழ்கிறார்.

“அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே”
“மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து
வீதியின் மேவி நிற்கு முருகோனே”
“அணி பொன் மேருயர் கோபுர மாமதில்
அதிரும் ஆரண வாரண வீதியுள்
அருணை மாநகர் மேவி உலாவிய பெருமாளே”

[அழகிய பொன்மலை மேரு போல் உயர்ந்த கோபுரம், பெரிய மதில், ஒலி பெருகும் வேத ஒலி முழக்கும் வீதி, யானைகள் செல்லும் வீதி இவைகள் உள்ள அண்ணாமலை மாநகரில் விரும்பி உலாவும்
பெருமாளே”

“பழய ஞானச் சோணகிரி வீதிக்கந்தவேளே”

[பழைமையானதும், ஞானபூமியுமான திருவண்ணாமலையில் வீற்றிருக்கும்
கந்த வேளே!]

“போதக மயூரப் போதக கடாமற்
போதருணை வீதிக் கந்த வேளே”

[முருகப் பெருமான், திருவண்ணாமலையில் யானை வாகனத்தின் மீதும், மயில் மீதும் மலராசனம் இட்ட நடு இடத்தில், திருவண்ணாமலை வீதிகளில் எழுந்தருளி வருகிறான்].

“அருணை வந்து தென் திசைதனில் உறைதரு பெருமாளே”

[திருவண்ணாமலையில் தெற்கு வீதியிலுள்ள குமரன் கோயிலில் பாடப்பட்டது].
கோயிலினுள் நாம் தரிசிக்க வேண்டிய சந்நதிகளைப் பற்றி இனிக் காண்போம்.

ராஜ கோபுரத்தடியில் உள்ள விநாயகரை வணங்கி உள்ளே செல்லும் போது, முதலில் நாம் தரிசிப்பது

(1) கம்பத்து இளையனார் சந்நதி

அருணகிரியார் காலத்தில் திருவண்ணாமலையை ஆண்டுவந்த பிரபுடதேவ ராயன் எனும் அரசன், அவரிடத்து மிகுந்த அன்பு பூண்டு விளங்கினான். இது கண்டு பொறாமையுற்ற சம்பந்தாண்டான், “என் வழிபடு கடவுளான பராசக்தியை சபையில் வரவழைத்துக் காட்டுவேன்; அருணகிரிநாதனும் அவ்வாறே முருகனை வரவழைக்க வேண்டும்” என்று சூளுரைத்தான். ஆனால் அவனால் தேவியை சபையில் வரவழைக்க முடியவில்லை. அருணகிரிநாதர் பின் வரும் பாடல் அடிகளை மனம் உருகப் பாடிய போது, முருகன் வேலும் மயிலும் உடன் விளங்க மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் க்ஷண நேரம் தரிசனம் தந்தான். எனவே, ‘கம்பத்திளையனார்’ என்று பெயர் பெற்றான்.

“இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ அணுகாத
இருடி அயன் மால் அமரர் அடியார்
இசையும் ஒலிதான் இவைகேளா(து)
ஒருவன் அடியேன் அலறு மொழிதான்
ஒருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதான்
உனது கிருபாகரம் ஏதோ”

“அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்(று)
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவாராட
அருகு பூத வேதாளம் அவையாட
மதுர வாணிதான் ஆட மலரில் வேதனார் ஆட
மருவு வானுளோர் ஆடமதியாட
வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட
மயிலும் ஆடி நீ ஆடி வரவேணும்”

இவ்வாறு முருகன் தரிசனம் தந்த உண்மையை

“சயிலம் எறிந்த கை வேற்கொடு மயிலினில் வந்து
எனை ஆட்கொளல் சகமறியும்படிக் காட்டிய குருநாதா”
“உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில்.
ஒரு நொடிதனில் வரு மயில்வீரா”

எனும் திருப்புகழ்ப் பாக்களால் அறியலாம்.

(2) ஆயிரங்கால் மண்டபம்

ராஜ கோபுர வாசல் வழியே செல்லும் போது வலப்புறம் அமைந்துள்ளது. இது கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது என்றறிகிறோம். ஆயிரம் தூண்களைக் கொண்டது. ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றில் இம் மண்டபம் பெரும் பங்கு வகித்தது என்பதைப் பின்னால் பார்க்கலாம்.

(3) சிவகங்கைத் தீர்த்தம்

கம்பத்து இளையனார் சந்நிதிக்குத் தெற்கே நாற்புறமும் திருமாளிகைப் பத்தி மண்டபத்துடன் இத் திருக்குளம் அமைந்துள்ளது. இத் திருக்குளத்திற்கு, ‘திருமலை அம்மன் தேவி சமுத்திரம்’ எனும் பெயரில் கால்வாய் வெட்டி, தண்ணீர் கொண்டு வந்ததாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.

(4) கோபுரத்து இளையனார் சந்நதி

அருணகிரியாரைத் தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் வீற்றிருக்கும் சந்நிதி. அருணகிரியாரின் செப்புத் திருமேனியும் உள்ளது.

(5) சர்வசித்தி விநாயகர் சந்நதி

சிவகங்கைத் தீர்த்தத்தின் வடகரையில் அமைந்துள்ளது. சிவகங்கை விநாயகர் என்றும் குறிப்பிடப்படுகிறார். தண்டாயுத பாணியைத் தரிசிக்கலாம்.

(6) நந்தி மண்டபம்

வல்லாள மகாராஜாவினால் கட்டப்பட்ட நந்தி மண்டபத்தில், மலையைப் பார்த்தபடி மிகப் பெரிய நந்தி உருவம் உள்ளது. ‘மலையே சிவம்’ என்ற நமது
நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது.

(7) பஞ்சபூத சந்நதிகள்

பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமாகிய அருணாசலத்தைத் தரிசிக்கும் நாம், மற்ற நான்கு தலங்களுக்கான (திருக்காளத்தி – காற்று, திருஆனைக்கா – அப்பு, காஞ்சிபுரம் – மண், சிதம்பரம் – ஆகாயம்) தனிச் சந்நதிகளையும் கோயில் வளாகத்திலேயே தரிசித்து மகிழலாம்.

(8) மூன்றாம் பிராகாரம்

இங்குள்ள காட்சி மண்டபத்தில் 16 தூண்கள் உள்ளன. இம்மண்டபத்திலிருந்து தான் கார்த்திகைத் திருநாளில் பஞ்ச மூர்த்திகள் தரிசனம் தருகின்றனர். அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் தரும் இடமும் இதுவே. தெற்கே தலமரமான மகிழமரமும், திருக்கல்யாண மண்டபமும் உள்ளன.

(தொடரும்)

சித்ரா மூர்த்தி

Tags : Shivaberuman ,Tiruvannamalai ,Seafront Casino Lingam ,Kanjima Nakarara Lingam ,Kaviri Vadapal Varu ,
× RELATED அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!