23.5.2026 – சனி மதுரை கூடலழகர் பிரம்மோற்சவம்
108 வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தாண்டு விழா வருகிற மே (23ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் ஜூன் 4ந் தேதி வரை நடைபெறுகிறது. தினந்தோறும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அன்று இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருள்கிறார். அதனைத் தொடர்ந்து மே 24ந் தேதி 2ம் நாள் திருவிழாவில் சிம்ம வாகனத்திலும், மே 25ந் தேதி 3ம் நாள் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், மே 26ந் தேதி 4ம் நாள் திருவிழாவில் கருட வாகனத்திலும், மே 27ந் தேதி 5ம் நாள் திருவிழாவில் சேஷ வாகனத்திலும், மே 28ந் தேதி 6ம் நாள் திருவிழாவில் யானை வாகனத்திலும், மே 29ந் தேதி 7ம் நாள் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு உற்சவம் மற்றும் பூச்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மே 30ந் தேதி 8ம் நாள் திருவிழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து மே 31ந் தேதி 9ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.
அன்று இரவு கொடியிறக்கம் நடைபெறுகிறது. ஜூன் 1ந் தேதி 10ம் நாள் திருவிழாவில் சப்தவர்ண சப்பரத்திலும், அதனைத் தொடர்ந்து ஜூன் 2ந் தேதி 11ம் நாள் திருவிழாவில் காலை தீர்த்தவாரி உற்சவம் முடிந்து கோவிலில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றங்கரையில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் ஜூன் 3-ந் தேதி காலை மீண்டும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்குத் திரும்புகிறார். ஜூன் 4-ந் தேதி உற்சவ சாந்தி பூஜை மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
24.5.2026 – ஞாயிறு திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவம்
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலின் 2026-ஆம் ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா மே 23 முதல் மே 31 வரை 9 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. தினமும் காலை 7:00 – 9:00 மணி மற்றும் இரவு 7:00 – 9:00 மணி வரை வாகன சேவைகள் நடைபெறும். விழாவிற்கான அங்குரார்ப்பணம் மே 22-ம் தேதி மாலை நடைபெறுகிறது. மே 27-ல் கருட சேவையும், மே 30-ல் தேர்த் திருவிழாவும் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறும். 1-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
25.5.2026 – திங்கள் சிவகாசி விஸ்வநாதர் தேர் உற்சவம்
சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் தேர்த் திருவிழா (ரத உற்சவம்) மே 25, 2026 அன்று சிறப்பாக நடைபெறுகிறது. 16-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட, காசி விஸ்வநாதர்-விசாலாட்சி அம்மன் கோயில் தேரோட்டம், சிவகாசியின் முக்கிய ஆன்மிக நிகழ்வாகவும், உள்ளூர் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விழாவாகவும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வருவார்கள்.
25.5.2026 – திங்கள் ஆழ்வார் திருநகரி கருட சேவை
வைணவத்தில் ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார்தான். வைணவத்தில் ஆழ்வார்கள் வரிசை நம்மாழ்வாரிடம் தொடங்கி திருமங்கை ஆழ்வாரிடம் முடியும். ஆழ்வார் அவதாரத்தலம் ஆழ்வார் திருநகரி. ஆழ்வார் திருநகரி திருக்குருகூர் என்றும் வழங்கப்படும். தாமிரபரணி கரையில் உள்ள திருத்தலம். தாமிரபரணி கரையை ஒட்டி வட கரையிலும் தென்கரையிலும் அடுத்தடுத்த திருத்தலங்களை ஒன்றாக நவதிருப்பதிகள் என்று அழைக்கும் மரபு உண்டு. ஆழ்வாரின் அவதார நட்சத்திரமானது வைகாசி விசாகம். இந்த வைகாசி விசாகத்துக்கு ஒப்பான ஒரு திருநாள் இல்லை என்றார் மணவாள மாமுனிகள்.
பிரசித்தி பெற்ற 9 கருடசேவை நடைபெறும் காலை சுவாமி நம்மாழ்வார் பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருளுவார். நவதிருப்பதி எம்பெருமான்களுக்கு மதுரமான தமிழில் மங்களாசாசனம் நடைபெறும். இது பார்க்கப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அன்று இரவு மதுரகவி ஆழ்வார் முன்செல்ல, ஸ்ரீ நம்மாழ்வார் அம்ச வாகனத்தில் எழுந்தருள, 9 எம்பெருமான்களும் கருட வாகனத்தில் ஆரோகணித்த கருட சேவை உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த மங்களாசாசன உற்சவத்திற்காக ஆயிரக்கணக்கான அன்பர்கள் கூடியிருப்பார்கள். ததீயாராதனம், வைணவ மாநாடுகள், கருத்தரங்கங்கள், இசைக்கச்சேரிகள் என ஆழ்வார் திருநகரியே கோலாகலமாக இருக்கும்.
25.5.2026 – திங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வசந்த உற்சவம்
சென்னை திருவல்லிக்கேணியில் புகழ்பெற்ற ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் வசந்த உற்சவம் ஒவ்வொரு வருடமும், வசந்த காலமான வைகாசி மாதத்தில் நடைபெறும். ஏழு நாட்கள் இது நடைபெறும். இந்த உற்சவம் இன்று தொடங்குகிறது
26 5 2026 – செவ்வாய் திருவிடைமருதூர் திருக்கல்யாணம்
கும்பகோணம் அருகே புகழ்பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எத்தகைய சாபத்தையும் தீர்க்கும் சாப தோஷ நிவர்த்தித் திருத்தலமாக இத்திருத்தலம் வழங்கு கின்றது .1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெறும் கோயில். இத்தலத்து இறைவன் ஸ்ரீ மகா லிங்கப் பெருமான். மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட மூன்று தலங்களில் இந்த தலம் நடுவில் அமைந்ததால் இடைமருதூர் என்று ஆனது. இறைவனுக்கு மருதவாணன் என்கிற பெயரும் உண்டு. அதிக தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. (திருவையாறும் அதிக பாடல் பெற்ற தலம்) ஞானக்கூத்த சிவப்பிரகாச தேசிகர் இத்தலத்தின் சிறப்பை மூவாயிரம் பாடல்களில் பாடி இருக்கின்றார். சம்பந்தப் பெருமான் இந்தத் திருத்தலத்துக்கு வந்த போது வழியெல்லாம் சிவலிங்கமாக இருந்தது .எனவே, தரையில் கால் பதிக்க அஞ்சினார். அப்பொழுது சிவன் “நம் குழந்தையை அழைத்து வா” என, அம்பிகை சம்பந்தரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வந்ததாகச் செய்தி உண்டு. பெரும்பாலான கோயில்களில் சென்ற வழியே வெளியே வந்து விடலாம். ஆனால் இங்கே சென்ற வழியே திரும்பக் கூடாது. வேறு வாசல் வழியாக திரும்ப வேண்டும் என்பது விதி. காசிக்கு நிகரான இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவில் இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
26.5.2026 – செவ்வாய் குரு பெயர்ச்சி
இன்று குரு பகவான் மிதுன ராசியிலிருந்து, உச்ச வீடான கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த பெயர்ச்சி கடகத்தில் குருவின் உச்ச பலனைத் தருவதால், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் உள்ளிட்ட பல ராசிகளுக்கு ராஜயோகமான நற்பலன்களை வாரி வழங்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகளை நிவேதனம் செய்து வழிபட, குருவின் அருளை
முழுமையாகப் பெறலாம்.
27.5.2026 – புதன்மயிலாடுதுறையில் திருக்கல்யாணம்
மயிலாடுதுறையில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆலயம் மயூரநாதர் ஆலயம். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற மிகப் பழமை வாய்ந்த ஆலயம். இங்கே அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததால், சிவனும் மயிலாக வந்து, பார்வதி தேவியுடன் சேர்ந்து மயூர தாண்டவம் ஆடினார். இவ்வாலயத்தில் வைகாசித் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மயூரநாதர் அபயாம்பிகையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி திருக்கல்யாணம் மேற்கொள்வார். பெண்கள் சீர்வரிசை எடுத்து வருவார்கள். ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். பிறகு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெறும்.
27.5.2026 – புதன்மோஹினி ஏகாதசி
இன்றைய தினம் வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி. கங்கையின் புனிதமான நதி இல்லை என்பது போல் ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்று சொல்வார்கள். ஏகாதசி உபவாசம் இருந்து, துவாதசி அதிகாலை பாரணை செய்தால் திருமாலின் திருவருளைப் பெறலாம் என்பது சாஸ்திரம். இந்த ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். இதை கடைபிடித்தால் எத்தகைய பாவ விளைவுகளில் இருந்தும் விடுபட்டு விட முடியும்.
வசிஷ்டர் ராமருக்கு சொன்ன ஏகாதசி மோகினி ஏகாதசி. சீதையைப் பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், ‘‘ராமா! வருகின்ற வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். பிரிந்த சீதை உன்னிடம் வந்து சேருவாள்” என்று கூற, சாட்சாத் விஷ்ணுவான ஸ்ரீ ராமபிரானே, முறையாக, ஏகாதசி விரதத்தை இருந்தார் என்ற சிறப்பு இந்த ஏகாதசிக்கு உண்டு.
ஏகாதசி விரதத்தில் அரிசி முதலிய தானியங்களை உண்ணக்கூடாது. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கஞ்சி பால் பழம் அல்லது உடைக்கப்பட்ட அரிசியினால் செய்யப்பட்ட உப்புமா போன்றவற்றை உட்கொண்டு, எம்பெரு மானுடைய திவ்ய நாம சங்கீர்த்தனத்தைப் பாடலாம். மிக முக்கியமாக துவாதசி பாரணையின்போது வாழையிலை, வாழைக்காய் போன்றவற்றைத் தவிர்த்து விட வேண்டும் அதற்குப் பதிலாக நெல்லிக் காயைப் பயன்படுத்தலாம்.
28.5.2026 – வியாழன் அக்னி நட்சத்திரம் முடிவு
இதுவரை சுட்டெரித்த கத்தரி என்னும் அக்னி நட்சத்திரம் இன்றோடு விடைபெறுகிறது அக்னி நட்சத்திர காலத்தை தோஷ காலம் என்று சொல்லி சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பண்டைய நாளைய வழக்கம். இக்காலத்தில் அக்னிதோஷ நிவர்த்தி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. காலை சர்க்கரைப் பொங்கல் அல்லது கோதுமைப் பொங்கல் வைத்து, சூரிய நமஸ்காரம் செய்து அக்னிதோஷ நிவர்த்தியைச் செய்து கொள்ளலாம். இந்த அக்னிதோஷ காலத்திற்குப் பிறகு சுப காரியங்களை நல்ல நாள் பார்த்து தாராளமாகச் செய்யலாம்.
28.5.2026 – வியாழன் காஞ்சி வரதராஜப் பெருமாள் பிரம்மோற்சவம்
காஞ்சிபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிறப்பு வழிபாடுகளுக்கு அடுத்து வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
