×

பக்ரீத்பண்டிகையையொட்டி செங்கம் ஆட்டுச்சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வர்த்தகம்: வியாபாரிகள் மகிழ்ச்சி

செங்கம், மே 25: பக்ரீத் பண்டிகையையொட்டி செங்கம் ஆட்டுச்சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இங்கு லட்சக்கணக்கில் ஆடுகள் வியாபாரம் நடப்பது வழக்கம். குறிப்பாக ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் மற்றும் ஆடி திருவிழாக்களின்போது வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனை நடக்கும். அதன்படி வரும் 28ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் நேற்று ஆட்டுச்சந்தை களைகட்டியிருந்தது.

இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து லோடு ஆட்டோக்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட பல மாவட்டங்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஆடுகளை வாங்க வந்தனர். காலை முதல் மதியம் வரை நடந்த சந்தையில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆடுகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் மேலும் கூறுகையில், `ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையையொட்டி பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து செங்கம் சந்தையில் ஆடுகளை வாங்கிச்செல்ல ஏராளமானோர் வருவர். அதன்படி வரும் 28ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் அதற்கு முன்னதாக நடந்த சந்தையில் வெள்ளாடு, செம்மறியாடுகள் உள்ளிட்டவை காலை முதல் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

அவற்றின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து விற்கப்பட்டது. இதுதவிர விவசாயிகளும் தங்கள் பட்டியில் வைத்து பராமரிக்கப்படும் உள்ளூர் ஆடுகளையும் விற்பனைக்கும் கொண்டு வந்தனர். ஒரேநாளில் ரூ.50 லட்சத்திற்கு மேல் வியாபாரம் நடந்தது’ என்றனர்.

 

Tags : Chengam ,Bakrid festival ,Chengam, Tiruvannamalai district ,Ramzan ,Bakrid ,Christmas ,
× RELATED ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில்...