சென்னை: தமிழகத்தையே உலுக்கி இருக்கும் கோவை சிறுமி கொலை வழக்கில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் காலை முதல் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து பல கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் விஜய், இந்த சம்பவம் குறித்து ஒரு அறிக்கை கூட முதலில் விடவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளானது. அவரின் இந்த அமைதி எந்த அளவிற்கு இருந்தது என்றால், கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்களே, தாங்கள் இருக்கும் மோசமான மனநிலையையும் தாண்டி வாய்விட்டு கேட்டே விட்டார்கள். தங்களது பெரும் இழப்பிற்கு மத்தியிலும் சில மணி நேரங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சிறுமியின் உறவினர்கள், இதுவரை முதல்வர் விஜய் எங்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை, அறிக்கை கூட விடவில்லை. எங்கள் மகள் கொலையில் தமிழக முதல்வர் விஜய் ஏன் மவுனமாக இருக்கிறார். பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது தொடர்பாக கூட முதலமைச்சர் இதுவரை பேசவில்லை. எங்களுக்கு நீதி கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இவ்வாறு பேசிய சில மணி நேரங்களுக்கு பின்பு தற்போது முதல்வரிடமிருந்து அறிக்கை வந்திருக்கிறது.
அந்த அறிக்கையில் முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது, கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.
