- செங்கோட்டையன்
- கிருஷ்ணகிரி
- இளவரசு
- வேலு
- புருஷோத்தமன்
- ஹொசூர் தர்கா
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- திண்டிகுல்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா பகுதியைச் சேர்ந்த இளவரசு, வேலு, புருஷோத்தமன் ஆகியோர் தலைமையில் 75க்கும் மேற்பட்டோர், நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். பின்னர், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அடுத்த பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஓசூரில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது, உடன் வேலை பார்த்த ஓசூர் தர்கா பகுதியைச் சேர்ந்த இளவரசு என்பவர் பழக்கமானார். பின்னர், வேலையை விட்டு நின்ற கார்த்திக், சொந்த ஊரான திண்டுக்கலுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இளவரசுவை தொடர்பு கொண்ட கார்த்திக், தான் ‘ஸ்டார்ட் கனெக்ட் அக்ரி டெக் பிரைவேட் லிமிடெட், (எஸ்.சி.ஏ.டி.) என்ற நிறுவனத்தில் நிர்வாக குழுவில் இருக்கிறேன். இந்த நிறுவனம் விவசாயத் துறையில் மாபெரும் புரட்சி செய்ய உள்ளது. ‘விதை முதல் விற்பனை’ என்ற திட்டத்தில், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளன. இதில் விவசாயிகள் அல்லாதவரும் 1,000 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு தொகை செலுத்தலாம். ஒரு வருடம் கழித்து அவர்கள் கட்டிய தொகையில், மூன்று மடங்காக லாபத் தொகையுடன் மாதந்தோறும் திருப்பி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும், அரசியல் கட்சி தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கிறோம். தவெகவில் இணைந்த செங்கோட்டையுடனும் நட்பில் உள்ளோம். விரைவில் இந்த நிறுவனத்திற்கு ஒன்றிய விருது கிடைக்க உள்ளது என கூறினர். அவர்கள் கூறியதை நம்பி, பலர் பணம் கட்டினோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 4,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளோம். எங்களிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய கார்த்திக், சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த சித்தூரை சேர்ந்த தமிழ் இலக்கியன் என்பவரை, நிறுவன மேலாண்மை இயக்குனர் எனவும், திண்டுக்கல், மதுரை, சென்னையில் தங்களது நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளன எனவும் கூறினார்.
அதே போல், சிறிதளவு பணம் செலுத்தியவர்களுக்கு மாதந்தோறும் லாபத்தொகையுடன் சேர்த்து, அவர்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார். இதையடுத்து, எங்களிடம் இருந்த மொத்த தொகையையும், அந்த நிறுவனத்தில், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில் அனுப்பினோம். கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின், பணம் கட்டியவர்களுக்கு எந்த தொகையும் வரவில்லை. அவர்கள் தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் குழுக்கள், இணையதளங்கள் எதுவும் இயங்கவில்லை. இது குறித்து கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஓசூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு புகார் அளித்தோம்.
ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களிடம் பணத்தை ஏமாற்றியவர்கள், வீடு, நிலம், கார் என வாங்கி வைத்துள்ளனர். ஆனால், எங்கள் தொகையை கொடுக்க மறுக்கின்றனர். இன்று புகாரளித்த 75 பேரிடம் மட்டும், ரூ.6.55 கோடி மோசடி நடந்துள்ளது. எங்களுக்கு அவர்கள் கூறியபடி முதிர்வு தொகையாக ரூ.20 கோடி வர வேண்டும். இது குறித்து மனுவை பெற்றுக்கொண்ட ஏடிஎஸ்பி வேலுமணி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு அனுப்பி முறையாக விசாரிக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
