சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதேநேரம் அதிமுகவின் மற்றொரு அணியை சேர்ந்தவர்கள் சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, காமராஜ், திருத்தணி அரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக மீண்டும் ஒரு படுதோல்வியை சந்தித்திருக்கிறது. தோல்வி இந்த தேர்தலில் மட்டுமல்ல, 2019ல் இருந்து தொடர்ந்து தோல்விதான்.
2 நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2 சட்டமன்ற பொதுத்தேர்தல் பல்வேறு இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல் என தொடர்ந்து அதிமுக தோல்வியையே சந்தித்து வருகிறது. தோல்விக்கு தோல்வி அதிமுக வாக்கு வங்கி வரிசை நோக்கி சென்று கெண்டிருக்கிறது. இது இந்த இயக்கத்துக்கான அச்சுறுத்தல். இந்த தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். 2024 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிறகு சந்தித்தோம். 6 பேர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் சந்தித்து பேசினோம். இனியும் தோல்வி தொடர்ந்தால் வெற்றிபெற முடியாது. பிரிந்து சென்றவர்கள், நீக்கியவர்கள் என அனைவரும் இணைந்து அதிமுகவை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது அதை நிராகரித்தார்.
அன்றைக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு ஆய்வு கூட்டம் நடைபெற்று இருந்தால் இந்த இயக்கத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று நிர்வாகிகளுக்கும் தெரிந்திருக்கும், ஏன் என்றால் அது எடப்பாடிக்கு தெரியும். ஆனால் அதை செய்ய தவறி விட்டார். இன்றைக்கு அதிமுகவை ஒன்றிணைக்க மறுத்த காரணத்தால் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளோம். தவெகவுடன் கூட்டணி வையுங்கள் என்று சொன்னோம். அவர்களும் எங்களோடு கூட்டணி வைக்க பேச்சு நடத்தினார்கள். இன்றைக்கு அவர் மறுக்கலாம், கூட்டணி பேசியது நிசர்சனமான உண்மை. ஆனால், கூட்டணி பேச வந்தவர்களை உதாசீனப்படுத்தினார்.
கூட்டணி அமையக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் பேச வேண்டுமோ, அப்படியெல்லாம் பேசி அவர்களை விரட்டுவதிலேயே எடப்பாடி குறியாக இருந்தார். தவெகவை மட்டுமல்ல, தேமுதிகவையும் சேர்ப்பதற்கு அவருக்கு மனம் இல்லை. அதை அரை சதவீத கட்சி என்றார். இப்படி யாரையும் அரவணைக்காமல், நான் மட்டும் இருந்தால் போதும், எனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றார். அதிமுகவில் இருந்து சென்ற, ஒரு காலத்தில் இயக்கத்துக்காக பாடுபட்டவர்களை, ஏதோ ஒரு காரணத்துக்காக அவர் தவறு செய்திருந்தாலும், அவர் திருந்தி அதிமுகவுக்கு வருகிறேன், எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம், ஒரு உறுப்பினராக இருக்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னார்.
அவர் திமுகவுக்கு சேருவதற்கு முன்கூட கேட்டார். ஆனால் அதையும் எடப்பாடி ஏற்காமல், சேர்க்க மாட்டேன். எந்த காரணத்தை கொண்டும் அந்த 4 பேரை சேர்க்க மாட்டேன் என்றார்.
இன்றைக்கு தன்னுடைய பொறுப்புக்கு பாதிப்பு வருகிறது என்றவுடனே, தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்கிறார். இதை கடந்த காலத்தில் செய்திருந்தால், பிரிந்தவர்களை இணைத்திருந்தால், ஒருங்கிணைத்திருந்தால் இந்த நிலைமை ஏன் அதிமுகவுக்கு இன்று ஏற்பட்டிருக்கும். பிரிந்தவர்கள், சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையான, பலமான ஒரு அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே கோரிக்கை.
பொதுக்குழுவை கூட்டுங்கள், நல்ல முடிவு எடுப்போம். பொதுக்குழுவில் என்ன முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பொதுச்செயலாளரிடம் கொடுத்தால், 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று அதிமுக சட்ட விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டதிட்டத்துக்கு எதிராக, பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என்று கையெழுத்து வாங்கி சர்வாதிகாரமாக எடப்பாடி செயல்படுகிறார். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்கிறார். ஆனால் இப்போது பிரச்னையே, தோல்வியைத்தானே தொடர்ச்சியாக சந்தித்து வருகிறோம். அதுகுறித்துதான் விவாதிக்க வேண்டும் என்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
