×

இந்திய ராணுவ நிலைகளை லைவில் கண்காணித்த பாக். சதி வலையில் சிக்கிய 5 சிறுவர்கள் உட்பட 21 பேர் கைது

காசியாபாத்: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசியவிட்ட உளவு கும்பலை என்ஐஏ அதிகாரிகள் முறியடித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் போவாப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு வினேஷ் சவுத்ரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில் நிலையங்கள், ஆர்பிஎப் மற்றும் பாதுகாப்பு முகமை அலுவலகங்களில் சூரிய சக்தியில் இயங்கும் ரகசிய கேமராக்களை நிறுவி, அதன் நேரடி காட்சிகளை ஒரு கும்பல் பார்த்து வருவதாக தகவல் உறுதியானது.

தொடர் விசாரணையில் அந்த கும்பல், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் அந்த வீடியோவை பகிர்ந்து வந்தனர். இதற்காக யுபிஐ மூலம் ஒரு பணிக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் தொழில்நுட்ப அறிவுள்ள இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை இந்த தேசவிரோத செயலில் ஈடுபடுத்தியுள்ளனர். டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பாதுகாப்பு அரண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஜிபிஎஸ் வரைபடத்துடன் பாகிஸ்தான் எண்களுக்கு அனுப்பிய அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ, தற்போது 5 சிறுவர்கள் உள்ளிட்ட 21 நபர்களைக் கைது செய்துள்ளது. இந்த கும்பல் இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்த உதவியதும், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து ரகசிய தகவல்களைத் திரட்டியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இந்த தேசவிரோத சதித்திட்டத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்க என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Tags : Bagh ,Ghaziabad ,NIA ,Vinesh Choudhry ,Bowapur ,Uttar Pradesh ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...