டெல்லி: மத்திய அரசின் நிதிசார் கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு “பொருளாதாரப் புயலின்” விளிம்பில் இருப்பதாக எச்சரித்து உள்ளார்.
பொருளாதார புயல் நாட்டை தாக்கவிருக்கும் சூழலில், அதற்கு தயாராகி மக்களை பாதுகாக்க வேண்டும்என்று ராகுல் கூறியுள்ளார். உலகம் தற்போது எண்ணெய், உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை நோக்கி செல்கிறது. எதிர்பார்க்கும் பொருளாதார புயலை யாராலும் தடுக்க முடியாமல் போகலாம். இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
முக்கிய பெருநிறுவனத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் தங்கள் அரண்மனைகளுக்குள் முழுமையாகப் பாதுகாப்பாக அமர்ந்திருக்கும் அதே வேளையில், வரவிருக்கும் பொருளாதார புயலின் உண்மையான தாக்கம் நாட்டிலிருக்கும் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்களை பேரழிவிற்கு உள்ளாக்கும். பிரதமரால் மேற்கொள்ளப்பட்ட நிதிசார் மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியடையும் என்றும், அதன் மிகக் கடுமையான சுமையைச் சாமானிய மக்களே சுமக்க நேரிடும் என்றும் ராகுல் கூறி இருக்கிறார்.
மிக கடினமான ஒரு காலகட்டத்தை நாம் எதிர்கொள்ள போகிறோம். இதற்கு தகுந்த உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, பிரதமர் மோடி இந்திய குடிமக்களை வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூறுகிறார்; ஆனால் அவரோ உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறார் என்று சாடி இருக்கிறார்.
